மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு?
மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை,
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சென்னை, கோவை மற்றும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை அறிவித்தார்.
இந்த முழு ஊரடங்கின் போது அனைத்து கடைகளும், சந்தைகளும் அடைத்திருக்கும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
மதுரையில் இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. 3-ம் நாளான நேற்றும் மதுரையில் முழு அமைதி நிலவியது. அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களை தவிர சாலைகளில் யாரையும் காண முடியவில்லை. பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டன. காய்கறிகள் மாநகராட்சி வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. முதல்-அமைச்சரின் அறிவிப்புப்படி இந்த ஊரடங்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.
ஆனால் இதனை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதுகுறித்து அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். மதுரையில் இதுவரை மொத்தம் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமாகி வீடு திரும்பினர். 37 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட 12 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய பரிசோதனை முடிவின்படி மதுரையில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை நீடிக்க வேண்டுமென்றால் மதுரையில் மேலும் முழு ஊரடங்கினை நீட்டிக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது முழு ஊரடங்கு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப் படுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிக்கவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒருவேளை முழு ஊரடங்கு மதுரையில் நீட்டிக்கப்பட்டால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் 4 நாட்கள் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பின்படி பொதுமக்கள் அந்த நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கி கையிருப்பு வைத்திருப்பர். மேலும் காய்கறி விற்பனை மாநகராட்சி மூலம் தான் செய்யப்படுகிறது. ஆனால் இவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. மளிகை பொருட்களும், காய்கறியும் கிடைக்காதபட்சத்தில் மக்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Related Tags :
Next Story