நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று லாரி டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 46 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் அருகே உள்ள லத்துவாடியை சேர்ந்த செவிலியர், தூய்மைபணியாளர் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த 68 வயது முதியவர் என 3 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனால் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. மீதமுள்ள 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று புதிதாக நாமக்கல் அருகே உள்ள குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 31 வயது லாரி டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசம் சென்று திரும்பிய இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 30 வயது நிரம்பிய வாலிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறையினர் உறுதி செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 729 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் 26 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 3,230 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தவும், ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே குப்பம்பாளையம் பகுதிக்கு ‘சீல்’ வைத்துள்ள போலீசார் அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story