தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்: ஆணையாளர் சதீஷ் வழங்கினார்


தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்: ஆணையாளர் சதீஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 28 April 2020 10:15 PM GMT (Updated: 28 April 2020 8:40 PM GMT)

கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 19 பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் என 1,272 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி கொண்டலாம்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி பகுதியில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், கிருமிநாசினி தெளிப்பாளர்கள், கணக்கெடுப்பாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் சளி மாதிரி எடுப்பவர்கள் ஆகியோருக்கும் ‘ஜிங்க்‘ மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகளும், நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 1 லட்சத்து 81 ஆயிரத்து 618 பொதுமக்களுக்கும் மற்றும் மீதமுள்ள 41 கோட்டங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும் என்றார்.

முன்னதாக அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அவர் கிருமிநாசினி தெளிப்பு பணிகளை நாள்தோறும் 5 முறை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சரவணன், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, மருத்துவ அலுவலர் செந்தாகிருஷ்ணன், சித்த மருத்துவ அலுவலர்கள் வெற்றிவேந்தன், குமார், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story