நிவாரண பொருட்கள் வழங்க கோரி சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதி மக்கள் போராட்டம்


நிவாரண பொருட்கள் வழங்க கோரி சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2020 4:15 AM IST (Updated: 29 April 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண பொருட்கள் வழங்க கோரி சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த வைரசுக்கு 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக சேலம் மாநகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பகுதியான சேலம் தாதகாப்பட்டி அண்ணாநகர் பொம்மணச்செட்டிகாட்டை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள எங்களால் எந்த பொருளும் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். இதனிடையே அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் சாப்பாடு, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட எந்த ஒரு நிவாரண பொருட்களும் எங்களுக்கு கிடைப்பதில்லை. காய்கறிகள் கூட வாங்க முடியவில்லை. அரசு வழங்கிய ரூ.1000 எங்களுக்கு போது மானதாக இல்லை. எனவே இந்த பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதை தொடர்ந்து தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், கருங்கல்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிடுவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்றும், நிவாரண பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்றனர்.

Next Story