வரதட்சணை கொடுமையால் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை - போலீஸ்காரர் மீது போலீசில் புகார்
வரதட்சணை கொடுமையால் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ்காரர் மீது இளம்பெண்ணின் தாய் புகார் செய்து உள்ளார்.
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த வல்லூரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலைய குடியிருப்பில் வசிப்பவர் வெற்றிச்செல்வன். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் பத்மபிரியா(வயது 24). இவர்களுக்கு திவ்யபிரகாஷ்(22) என்ற மகனும் உள்ளார்.
பத்மபிரியாவுக்கும், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்(25) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜாராம், ஆவடி 5-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். ராஜாராம், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பத்மபிரியா, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த பத்மபிரியா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, இதுபற்றி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.
அதில், திருமணமான 2 மாதத்தில் எனது மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜாராம், அவரது குடும்பத்தினர் தகராறு செய்தனர். இதனால் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த பத்மபிரியா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி ஆவடி 5-வது பட்டாலியன் கமாண்டோவிடம் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜாராம், போனில் எனது மகன் திவ்யபிரகாசை மிரட்டினார். இதனாலேயே எனது மகள் தற்கொலை செய்து கொண்டாள் என கூறி இருந்தார்.
இதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர். திருமணமான 2-வது மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story