சென்னையில் 4 நாட்கள் ஆய்வுக்கு பின் டி.ஜி.பி.யுடன் மத்திய குழு சந்திப்பு
தமிழகத்தில் 4-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் தமிழக டி.ஜி.பி.யுடன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய குழுவினர் சென்னையில் நேற்று 4-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் நேற்றும் 2 குழுக்களாக பிரிந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, வி.திருப்புகழ், சப்தர்ஜங் ஆஸ்பத்திரி மற்றும் வி.எம்.எம்.சி. பேராசிரியர் டாக்டர் அனிதா கோகர் ஆகியோர் ஒரு குழுவாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந்நாதன், சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.
இந்த குழுவினர், சென்னை சாந்தோமில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சராசரியாக தினசரி எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருவார்கள்? என கேட்டறிந்தனர். மேலும், அங்கு பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டறிந்தனர். ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை’ ஆர்வத்துடன் பார்வையிட்ட மத்திய குழுவினர் அதனை வெகுவாக பாராட்டினர்.
அதைத் தொடர்ந்து சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கொரோனா வைரஸ் நோய் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது என்று தெரியுமா? முக கவசம் ஏன் அணிய வேண்டும்? என கொரோனா குறித்த விழிப்புணர்வு அந்த மக்களிடம் இருக்கிறதா? என்பதை கேட்டறிந்தார். அங்கு முக கவசம் அணியாமல் இருந்த ஒரு சிலருக்கு முக கவசங்களையும் வழங்கினர்.
நொச்சிக்குப்பம்
நொச்சிக்குப்பத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம் அப்பகுதி மக்கள், ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாக புகார் கூறினர்.
அதைத் தொடர்ந்து, பாலவாக்கத்தில் உள்ள விஷ்ராந்தி ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லத்தை ஆய்வு செய்தனர். அங்கு முதியோர்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், சமூக இடைவெளியை எவ்வாறு கடைபிடிக்கிறீர்கள் என்றும் கேட்டனர்.
குடிசை மாற்று வாரியம்
அதைத் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள ஒக்கியம் துரைப்பாக்கம், அன்னை இந்திரா நகரில் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘ஏர் லிக்யூடு’ என்ற பன்னாட்டு ‘வெண்டிலேட்டர்’ தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.இதே போன்று, என்.ஐ.டி.எம். பேராசிரியர் சூரியபிரகாஷ், இந்திய உணவுக்கழகத்தின் தலைமைப் பொது மேலாளர் லோகேந்தர் சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயல் அலுவலர் (ஐ.வி.சி.) டாக்டர் வி.விஜயன் ஆகியோர் கொண்ட குழுவினர் வரதராஜபுரம் குடிசைமாற்று வாரிய பகுதிகளிலும், புதுப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும், சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிலும், தனியார் மருந்தகம் ஒன்றிலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
டி.ஜி.பி.யுடன் சந்திப்பு
பின்னர், வி.திருப்புகழ் தலைமையிலான மத்திய குழுவினர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்ததுடன், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியை சந்தித்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எப்படி அமல்படுத்தப்படுகிறது? என்பது போன்று விவரங்களை கேட்டறிந்தனர்.
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை எவ்வாறு கண்காணிக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையானது சுகாதாரத்துறையுடன் எந்த அளவிற்கு இணைந்து செயல்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
நேற்றுடன் 4 நாட்கள் ஆய்வு பணிகள் முடிந்த பிறகும், மத்திய குழுவினர் இன்று (புதன்கிழமை) தமிழகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story