கவர்னருடன் ஆளும் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க வலியுறுத்தினர்


கவர்னருடன் ஆளும் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க வலியுறுத்தினர்
x
தினத்தந்தி 29 April 2020 4:46 AM IST (Updated: 29 April 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கோரி நேற்று கவர்னருடன் மகா விகாஷ் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

மும்பை, 

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக உள்ளார். எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.யாக இல்லாத மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசியலமைப்பு விதியின்படி தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள 6 மாதத்திற்குள், அதாவது அடுத்த மாதம் 28-ந் தேதிக்குள் மேற்கண்ட ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

எனவே மாநிலத்தில் 9 எம்.எல்.சி. பதவிக்கு கடந்த 24-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் மூலம் எம்.எல்.சி. ஆகி விடலாம் என உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த தேர்தல் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, கடந்த 9-ந்தேதி கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள எம்.எல்.சி. பதவியில் நியமிக்க கோரி மாநில மந்திரி சபை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னும் இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

கவர்னருடன் சந்திப்பு

இந்தநிலையில், மாநில மந்திரிசபை உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கோரி நேற்றுமுன்தினம் மீண்டும் பரிந்துரை செய்தது.

இது தொடர்பாக நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையில் மகா விகாஷ் அகாடி கூட்டணி தலைவர்களான மந்திரிகள் பாலசாகேப் தோரட், ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், ஏக்நாத் ஷிண்டே, அனில் பரப், அஸ்லம் சேக் ஆகியோர் ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து பேசினார்கள்.

அப்போது கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க முன்மொழியப்பட்ட மந்திரிசபை பரிந்துரையை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர்.

Next Story