மரப்பட்டறைகள் இயங்காததால் வேலையின்றி தவிக்கும் தச்சு தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக கட்டிட பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியும் மரப்பட்டறைகள் இயங்காததால் தச்சு தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி,
கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக கட்டிட பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியும் மரப்பட்டறைகள் இயங்காததால் தச்சு தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தச்சு தொழிலாளர்கள்
ஒரு புதிய வீட்டிற்கு அழகு தரக்கூடியது அந்த வீட்டில் வைக்கப்பட்டு உள்ள நிலைக் கதவுகள்தான். மேலும் வீட்டின் ஜன்னல்கள், சுவர் அலமாரிகள்(கப்-போர்டு) ஆகியவற்றை மரங்களைக்கொண்டு அழகிய வேலைப்பாடுகளோடு செய்து ஒரு வீட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவர்கள் தச்சு தொழிலாளர் கள்.
மேலும் திருமணம் மற்றும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு வீட்டிற்கு தேவையான கட்டில், பீரோ, டைனிங் டேபிள், நாற்காலி உள்ளிட்ட பொருட்களையும் செய்து தருபவர்கள் தச்சு தொழிலாளர்கள்.
வேலையில்லை- வருமானமில்லை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் கடைகள் எதுவும் இயங்கவில்லை. இதனால் மரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கட்டில், பீரோ, டைனிங் டேபிள் போன்ற மரப்பொருட்கள் விற்பனை எதுவும் நடைபெறவில்லை. இதனால் இவைகள் தயார் செய்வது நின்றுபோய் விட்டது. மேலும் கட்டிட வேலைகளும் இல்லாததால் ஏராளமான தச்சு தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன், வருவாய் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்ததும் கட்டிட பணி நடைபெறும் இடங்களுக்கு சென்று அந்த கட்டிடங் களுக்கு தேவையான கதவு, ஜன்னல் மற்றும் சுவர் அலமாரி, நவீன சமையல் அறைக்கு(மோடுலர் கிச்சன்) தேவையான மரப்பொருட்களை தயார் செய்யும் பணியில் ஈடுபடும் இவர்கள் பொழுது சாய்ந்த பின்னரே வீடு திரும்புவார்கள்.
பட்டினி கிடக்கும் சூழல்
தச்சு தொழிலாளர்களில் சிலர், தங்கள் வீடுகளின் ஒரு பகுதியிலேயோ அல்லது ஒரு இடத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோ பல்வேறு கட்டிடங்களுக்கு தேவையான மரப்பொருட்களுக்கு ஆர்டர் எடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டு மரப்பொருட்களை தயார் செய்து அனுப்பி வைப்பார்கள்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தச்சு தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி, வருமானம் இன்றி தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இவர்களின் வருமானம் நின்று போனதால் இவர்களின் குடும்பத்தினர் உணவின்றி பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டவில்லை
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் கட்டிட பணிகள் நடைபெறலாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஆனாலும் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக மரத்தொழிலுக்கு முக்கியமாக திகழும் மரம் வெட்டும் தொழிலாளர்கள் மரம் வெட்ட செல்லாததாலும், வெட்டிய மரங்களை அறுக்க மரப்பட்டறைகள், கடசல் எந்திரங்கள் இயங்காததாலும் தச்சு தொழிலாளர்கள் முழுமையாக வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மரப்பட்டறைகள், கடசல் எந்திரங்கள் இயங்கினால் மட்டுமே இவர்களால் முழுமையாக தொழில் செய்ய முடியும் என்பதால் இவைகள் எப்போது திறக்கப்படும்? என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
ஊரடங்கு காரணமாக தமிழக அரசு வழங்கிய ரூ.1,000 உதவித்தொகை போதுமானதாக இல்லாததால் தச்சு தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தச்சு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்க தலைவர் லோகநாதன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Related Tags :
Next Story