அரசு ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: ‘மந்திராலயா’ மூடப்பட்டது - மராட்டியத்தில் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது
அரசு ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநில அரசின் தலைமை செயலகமான ‘மந்திராலயா’ மூடப்பட்டது. மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 729 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
இதில் மாநில தலைநகர் மும்பையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொட்டது. அதாவது, புதிதாக 393 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்தது.
நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக (கன்டெய்ன்மென்ட் சோன்) 1,200-க்கும் அதிகமான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மும்பையில் ஊரடங்கின் போது பணியில் ஈடுபட்டு வந்த பெஸ்ட் பஸ், மின் வினியோக ஊழியர்கள், போலீசாரையும் கொரோனா தாக்கியது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசின் அரசு பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் கூட இந்த கொடிய நோய்க்கு ஆளாகி விட்டனர். மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயின் வீட்டு காவலாளியையும் கொரோனா தாக்கியது.
மந்திராலயா ஊழியர்கள்
இந்தநிலையில் மும்பை நரிமன்பாயின்ட் பகுதியில் உள்ள மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயா ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊழியர்கள் 4 பேரும் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரும் மந்திராலயா துப்புரவு பணியாளர்கள் என கூறப்படுகிறது. இதில் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையும், மற்ற 3 பேருக்கு நேற்று முன்தினமும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
இங்கு தான் முதல்-மந்திரி, மந்திரிகள் அலுவலகங்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக மந்திராலயா மிக குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வந்தது.
கட்டிடம் மூடப்பட்டது
ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து மந்திராலயா மற்றும் அதையொட்டி உள்ள புதிய நிர்வாக கட்டிடத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த கட்டிடங்களை முழுமையாக கிருமி நாசினியால் சுத்தப்படுத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக நேற்று மாலையே மந்திராலயா மூடப்பட்டது. நாளை(வியாழக்கிழமை) வரை மந்திராலயா கட்டிடம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த தகவலை மாநில கூடுதல் தலைமை செயலாளர் (பொதுநிர்வாகம்) சீத்தாராம் குந்தே அறிவித்து உள்ளார்.
தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை
மேலும் கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) மனோஜ் சவுனிக் கூறுகையில், தொற்று பாதிக்கப்பட்ட பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேரை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது’’ என்றார்.
கொரோனாவின் கோரப்பிடியில் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும் தலைமை செயலகமே சிக்கி இருப்பது மராட்டிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story