அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி


அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 29 April 2020 5:08 AM IST (Updated: 29 April 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக கொரோனா வைரஸ் நிர்வாக செய்தித்தொடர்பாளரான பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இன்று (நேற்று) புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்த வைரசுக்கு 523 பேர் பாதிப்புக்கு (இறந்தவர்கள் உள்பட) ஆளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 23 ஆயிரத்து 943 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 288 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு சம்பளத்தில் மாதந்தோறும் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த கூடுதல் ஊதியம் வழங்கப்படும். பசுமை மண்டலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடு

பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை. இங்கு பழைய நிலையே தொடரும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பிறகு இந்த தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் நலனுக்காக இந்த தேர்வை அவசியம் நடத்த வேண்டும். முழுமையான கல்வி திட்டத்திற்கு கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளேன்.

மதிய உணவு திட்ட ஊழியர்களின் சம்பளத்திற்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.600 மட்டுமே வழங்குகிறது. ஆனால் மாநில அரசு தனது பங்கை பல முறை உயர்த்தியுள்ளது. அதனால் மத்திய அரசும் அந்த சம்பள பங்கை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். காணொலி காட்சி மூலம் மத்திய மனிதவளத்துறை மந்திரி நடத்திய நிகழ்ச்சியில் நான் பங்கேற்று இந்த கோரிக்கையை முன்வைத்தேன்.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Next Story