தமிழகத்திலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது: மணக்காத மயிலாடுதுறை கருவாட்டு சந்தை வருவாயின்றி வியாபாரிகள் தவிப்பு


தமிழகத்திலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது: மணக்காத மயிலாடுதுறை கருவாட்டு சந்தை வருவாயின்றி வியாபாரிகள் தவிப்பு
x
தினத்தந்தி 29 April 2020 5:25 AM IST (Updated: 29 April 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலேயே முதன்முதலில் தொடங்கப்பட்ட மயிலாடுதுறை கருவாட்டு சந்தை வியாபாரம் இல்லாததால் மணம் வீசாமல் உள்ளது. இதனால் வருவாய் இன்றி வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

குத்தாலம், 

தமிழகத்திலேயே முதன்முதலில் தொடங்கப்பட்ட மயிலாடுதுறை கருவாட்டு சந்தை வியாபாரம் இல்லாததால் மணம் வீசாமல் உள்ளது. இதனால் வருவாய் இன்றி வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

முதல் கருவாட்டு சந்தை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தையொட்டி சித்தர்காட்டில் ஆலந்துறையப்பர் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் கருவாட்டு சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதலாவது கருவாட்டு சந்தை ஆகும். இது தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்த சந்தையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சட்டி பானைகள், அறுவடை செய்ய உதவும் கதிர் அரிவாள், துணிகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடுகள், குதிரைகள் என பலதரப்பட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் இங்கு அதிக அளவில் தற்போது வரை கருவாடு தான் விற்கப்படுகிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுமே சந்தை கூடினாலும், சனிக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை காலை வரை வியாபாரம் நடக்கும். இங்கு தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள் கருவாடுகளை வியாபாரம் செய்ய வருகின்றனர்.

ரூ.10 லட்சம் வணிகம்

திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கருவாடுகளை கொள்முதல் செய்ய இங்கு வந்து குவிவார்கள். வாரந்தோறும் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்து கொண்டு பெரிய வியாபாரிகள் சென்று விடுகின்றனர். அதன்பிறகு சிறு வியாபாரிகள், ஞாயிற்றுக் கிழமை காலை 5 மணிக்கு கடைவிரித்து அன்று நள்ளிரவு வரை சில்லறை விற்பனை செய்கின்றனர். வாரந்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை இந்த சந்தைக்கு வருகின்றனர். இங்கு வாரந்தோறும் சுமார் ரூ.10 லட்சம் வரை வணிகம் நடப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக சந்தை முடிந்து அடுத்த சந்தை கூடும் வரை ஒரு வாரம் கருவாட்டு மணம் இங்கே வீசி கொண்டே இருக்கும்

ஊரடங்கு

இந்த நிலையில் கடந்த மாதம்(மார்ச்) 25-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் கருவாட்டு சந்தையும் மூடப்பட்டது. இதனால் கருவாட்டு வியாபாரம் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் வருவாயின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் எப்போதும் கருவாட்டு மணம் வீசும் இந்த பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுவதுடன், கருவாடு விற்பனையின்றி மணக்காமல் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தரங்கம்பாடியை சேர்ந்த வியாபாரி கன்னியம்மாள் கூறியதாவது:-

தரங்கம்பாடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சந்தை உள்ளது. நான் கடந்த 30 ஆண்டுகளாக இங்கு வந்து கருவாட்டு வியாபாரம் செய்து வருகிறேன். நான் சிறு வயதில் எனது பாட்டி, தாயார் ஆகியோருடன் சேர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த சந்தைக்கு வந்து வியாபாரம் செய்துள்ளேன்.

வீணாகி வரும் கருவாடு

அப்போது தரங்கம்பாடியில் இருந்து ரெயிலில் ஏறி, மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறங்கி இந்த சந்தைக்கு மிக எளிதாக வந்துவிடுவோம். குறிப்பாக தரங்கம்பாடி, பூம்புகார் பகுதி மீனவ மக்கள், தங்கள் கருவாடுகளை விற்கும் ஒரு பொது இடமாகவே இந்த சந்தை இருந்து வருகிறது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் வருவதில்லை. மேலும் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கருவாடுகளும் விற்பனையாகாமல் வீணாகி வருகிறது. இதனால் வருமானமின்றி தவித்து வருகிறோம். எனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கருவாட்டு வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

வியாபாரி தவசி கூறியதாவது:-

ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரு மாதத்திற்கு மேலாக கடைகள் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கருவாடு திருடு போய்விட்டன. மேலும் தற்போது பெய்த மழையில் கருவாடுகள் நனைந்து வீணாகி விட்டது. இதனால் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவாடுகளை குப்பையில் கொட்டி உள்ளேன். எனவே எங்களுக்கு பாதுகாப்பான கடைகளை கட்டித்தர வேண்டும் என்றார்.

மாற்று உணவு

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் கடல் மீன்கள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் அசைவ பிரியர்களுக்கு மாற்று உணவாக கருவாடு விளங்குகிறது. மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை இந்த கருவாட்டு வியாபாரம் மூலம் ஓரளவுக்கு சரி செய்யலாம் என கருதுகின்றனர்.

எனவே கருவாட்டை உணவு பொருட்களாக அறிவித்து மூடப்பட்ட கருவாட்டு சந்தையை திறக்க வேண்டும். மேலும் கருவாடுகள் திருட்டு போகாமல் பாதுகாக்க கான்கிரீட் கட்டிடம் அமைத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story