நாகை மாவட்டத்தில் 1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை கலெக்டர் தகவல்


நாகை மாவட்டத்தில் 1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 April 2020 5:45 AM IST (Updated: 29 April 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் இதுவரை 1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் கூறியுள்ளார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் இதுவரை 1,358 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்த மாதிரி பரிசோதனை

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என சந்தேகத்தின் படி, இதுவரை 1,358 பேரின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காசி சென்று திரும்பிய வேளாங்கண்ணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது. இந்த இரண்டு நபர்களையும் சேர்த்து இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 22 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,298 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வசிப்பிடங்களாக மாவட்டம் முழுவதும் 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அத்தியாவசியமான பொருட்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் 50 மருத்துவர்கள், 40 செவிலியர்கள், 133 சுகாதார ஆய்வாளர்கள், 600 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 200 போலீசார் மூலம் வீட்டுக்கு வீடு சென்று கொரோனா பரவுதலுக்கான அறிகுறிகளை விசாரித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3,383 குடும்பங்கள்

மாவட்டத்தில் இதுவரை 3,383 குடும்பங்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருந்தனர். இவர்களது நடமாட்டம் 28 நாட்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 6 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 4 லட்சத்து 53 ஆயிரத்து 872 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி மற்றும் சில பேரூராட்சிகளில் வீட்டுக்கு வீடு ரூ.100 விலையுள்ள காய்கறி தொகுப்புகள் வேளாண்மை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story