கொரோனாவை பயன்படுத்தி நெல்லையில், வசூலில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியானதால் நடவடிக்கை


கொரோனாவை பயன்படுத்தி நெல்லையில், வசூலில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியானதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 April 2020 1:30 AM GMT (Updated: 29 April 2020 1:30 AM GMT)

நெல்லையில் கொரோனாவை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை, 

நெல்லையில் கொரோனாவை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

லாரி டிரைவர்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை போலீசார் தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார், சோதனைச்சாவடிகள் அமைத்து அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் உள்ள பழையபேட்டை காந்திநகர் பகுதியில் போலீசார் ஜீப்பில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லையை கடந்து ஆலங்குளம் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் கொரோனா காலத்தில் லோடு ஏற்றிச்சென்றது தொடர்பாக டிரைவரிடம் போலீசார் கேள்வி எழுப்பினர்.

பணி இடைநீக்கம்

இதையடுத்து அந்த லாரி டிரைவரிடம் இருந்து ரூ.100 பெற்றுக்கொண்டு லாரியை அனுப்பி வைத்தனர். இவ்வாறு போலீசாரால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அந்த லாரி டிரைவர், கொரோனாவை பயன்படுத்தி போலீஸ்காரர் வசூலில் ஈடுபட்டதை வீடியோ காட்சியாக படம் பிடித்தார். அந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடமும், உடன் நின்றிருந்த மற்றொரு போலீஸ்காரரிடமும் விசாரணை நடத்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவிட் டார். இந்த விசாரணையில் வசூலில் ஈடுபட்டது நெல்லை ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் செல்வகுமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் தீபக் டாமோர் அதிரடியாக உத்தரவிட்டார்.

Next Story