கள்ளிக்குடியில் மாற்று இடத்தில் விவசாயிகள் அமைத்த தற்காலிக சந்தை


கள்ளிக்குடியில் மாற்று இடத்தில் விவசாயிகள் அமைத்த தற்காலிக சந்தை
x
தினத்தந்தி 29 April 2020 8:45 AM IST (Updated: 29 April 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிக்குடியில் நேற்று மாற்று இடத்தில் விவசாயிகள் தற்காலிக சந்தைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்தனர்.

திருச்சி,

கள்ளிக்குடியில் நேற்று மாற்று இடத்தில் விவசாயிகள் தற்காலிக சந்தைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்தனர்.

விவசாயிகள் அமைத்த சந்தை

போக்குவரத்து நெரிசலில் செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய, திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் கள்ளிக்குடியில் ரூ.65 கோடியில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யக்கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகமாக கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்ததால் மூடப்பட்டது.

தற்போது விவசாயிகள் விளைவித்த பொருட்களின் சேமிப்பு கிடங்காகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து சிகிச்சை அளிக்கும் தனி வார்டுகளாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தநிலையில் கள்ளிக்குடி வணிக வளாகத்தின் முன்பு நேற்று முன்தினம் விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை திருச்சி மனித வளர் சங்கம் சார்பில் 20 கடைகளை அமைத்து விற்பனை செய்தனர். அங்கு காய்கறிகள் சந்தை மதிப்பை விட மிகவும் குறைவான விலைக்கே விற்கப்பட்டன.

மாற்று இடத்தில் கடைகள்

இந்தநிலையில் வணிக வளாகம் முன்பு காய்கறிகள் விற்பதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. வணிக வளாகம் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டாக செயல்பட்டு வருவதால் மாவட்ட கலெக்டர் காய்கறிகள் கடைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனாலும், நேற்று கள்ளிக்குடி வணிக வளாகம் அருகில் உள்ள தனியார் காலிமனைக்கு கடைகள் கொண்டு செல்லப்பட்டன. காலிமனையை பொக்லைன் எந்திரம் கொண்டு சீரமைத்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்தனர். இரண்டாவது நாளான நேற்று 30-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. காய்கறி வாங்க வந்தவர்கள் முக கவசம் அணிந்திட வேண்டும் என போலீசார் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர்.

ஒரு விவசாயி 1 கிலோ தக்காளி ரூ.10 என்றும், இன்னொருவர் ரூ.15 என்றும் விற்பனை செய்தனர். நேற்று முன்தினம் 1 கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்பனை ஆனது. அதேபோல 1 கிலோ பெரிய வெங்காயம் நேற்று முன்தினம் ரூ.10-க்கு விற்றது. ஆனால், நேற்று ரூ.20 என விற்றார்கள். இதுபோல ஒவ்வொரு காய்கறியின் விலையிலும் மாற்றம் இருந்தது.

சங்க கூட்டம்

இந்நிலையில், கள்ளிக்குடியில் காய்கறி சந்தை அமைப்பது தொடர்பான திருச்சி மாவட்ட மனித வளர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம், சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தலைமையிலும், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கள்ளிக்குடி அங்காடியில் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர்கள், சிறுவணிகர்கள் விற்கும் விலையை விட குறைவாகவே விற்க வேண்டும். சிறுவணிகர்கள் கடைகளுக்கு தேவையான காய்கறிகள் வேண்டுமெனில், சங்கத்திற்கு கைபேசி மூலம் தெரிவிக்கலாம் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

Next Story