உரம் இருப்பில் முரண்பாடு இருந்தால் உரிமம் ரத்து வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை


உரம் இருப்பில் முரண்பாடு இருந்தால் உரிமம் ரத்து வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 April 2020 9:46 AM IST (Updated: 29 April 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

உரம் இருப்பில் முரண்பாடு கண்டு பிடிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர், 

உரம் இருப்பில் முரண்பாடு இருந்தால் உரிமம் ரத்து இருப்பில் முரண்பாடு கண்டு பிடிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சாகுபடி

கரூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் மாவட்டத்தில் பயிறு வகைகள், கரும்பு, காய்கறிகள், பூச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை மழை பெய்வதால் பயிர்களுக்கு உரமிடும் பணி அனைத்து கிராமங்களிலும் நடந்து வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய பணிகள் தடையின்றி நடக்கும் வகையில் உரம், விதைகள், பூச்சி மருந்துகள் வினியோகம் செய்ய அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது யூரியா 1,544 மெட்ரிக் டன்னும், ஏ.டி.பி. 521 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 841, காம்ப்ளக்ஸ் 1,707 மெட்ரிக் டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் உரம் வினியோகிக்கப்பட்டு வருவதை கண்காணிக்க, 8 வட்டாரங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விற்பனை நிலையங்களிலும் விவசாயிகள், விற்பனையாளர்கள் என அனைவரும் கட்டாயமாக முக கவசங்கள் அணியவேண்டும்.

உரிமம் ரத்து செய்யப்படும்

உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு கிருமி நாசினி வழங்கி நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் தங்களுடைய கடைகளில் இருப்பு வைத்துள்ள உரங்களும், அதன் பதிவேடுகளும் சரியாக இருக்கும் படி வைத்திருக்க வேண்டும்.

அதே வேளையில் முறையாக இருப்பு பதிவேடுகள் மற்றும் விற்பனை ரசீது பராமரித்திட வேண்டும் இதனை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உரம் இருப்பில் முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டால் உர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story