மிரட்டுநிலை வாலிபருக்கு கொரோனா தொற்று எதிரொலி: தனி வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை
மிரட்டுநிலை வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனி வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை,
மிரட்டுநிலை வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனி வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொற்று உறுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மிரட்டுநிலை கிராமத்தில் டெல்லி சென்று வந்த ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியாவதற்கு முன்பு அந்த வாலிபர் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பணியில் இருந்த டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்த மருத்துவமனை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
பரிசோதனை
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பரிசோதனை அறையில் நேற்று இந்த பரிசோதனை நடந்தது. ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:-
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கடந்த 18, 19-ந் தேதிகளில் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த வாலிபர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த இரு தினங்களும் பணியிலிருந்த நபர்களுக்கு நோய் தொற்று பரிசோதனையை 5 தினங்களில் இருந்து 14 தினங்களுக்குள் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி சிறப்பு பரிசோதனை அறையில் 14 டாக்டர்கள், 14 செவிலியர்கள், 19 தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகிய 47 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 10 நாட்களுக்குள் பிரசவிக்க கூடிய 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
யோகா பயிற்சி
இதில், 56 பேரின் ரத்த மாதிரிகள் மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே புதிதாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முக கவசம் வெளிநோயாளிகள் பிரிவில் வழங்கப்படுகிறது.
டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக யோகா செய்முறை பயிற்சிகளும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பரிசோதனையின் போது நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி, உதவி நிலைய மருத்துவ அதிகாரி ரவிநாதன், காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ராயப்பன் குமார், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் சலீம் அப்துல் குத்தூஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
56 பேருக்கும் தொற்று இல்லை
இந்த நிலையில் டாக்டர்கள் உள்பட 56 பேருக்கும் பரிசோதனை முடிவு அறிக்கை நேற்று மாலை வெளியானது. இதில் 56 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என முதல்வர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story