கொரோனாவால் முடங்கிய மண்பாண்ட தொழில் வறுமையில் வாடும் தொழிலாளர்கள்
கொரோனாவால் மண்பாண்ட தொழில் முடங்கியதால் மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
தா.பழூர்,
கொரோனாவால் மண்பாண்ட தொழில் முடங்கியதால் மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
மண்பாண்ட தொழில்
அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த சோழமாதேவி கிராமத்தில் மண்பாண்ட தொழிலை செய்துவரும் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மண் பானை, சட்டி, அடுப்பு மற்றும் அகல் விளக்குகள் போன்ற மண்பாண்டங்களை உற்பத்தி செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாததால், உபரி வருமானத்துக்கு வழி இல்லாதவர்களாக இருக்கின்றனர். இவர்களது வாழ்வாதாரம் ரேஷன் கடையை நம்பியே உள்ளது.
மண்பாண்டம் செய்ய தேவையான மண்ணை கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள். மண் எடுப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது முதல் தங்கள் இடத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பது வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் ரத்னா கடந்த ஆண்டு நேரடியாக ஆய்வு செய்து அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்துகொண்டதோடு, ஆண்டுதோறும் மண்பாண்டம் செய்ய தேவையான மண்ணை எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்கும்படி செய்தார். அதனால் இந்த ஆண்டு நல்ல உற்பத்தி நிலையை எட்டினர்.
வாய்ப்பு இல்லை
வழக்கமாக இவர்கள் செய்யும் மண்பாண்டங்களை மொத்த விற்பனையாளர்கள் இவர்களிடம் இருந்து வாங்கி சென்று சந்தைகள், கடைகளில் சில்லரை விற்பனையில் ஈடுபடுவார்கள். கோடை காலம் தொடங்கும் போது மண் பானைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சந்தைகள், கடைகள் போன்றவை இல்லாததால் மொத்த விற்பனைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
நகர்ப்புறங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அனுமதி இல்லாததால் மண் பானைகள் விற்பனை முற்றிலும் முடங்கிவிட்டது. நவீன காலத்தில் எரிவாயு அடுப்புகள், குளிர்சாதன பெட்டிகள் பயன்பாடு அதிகரித்த காரணத்தால் நலிவடைந்திருந்த மண்பாண்ட தொழில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையாக முடங்கியுள்ளது.
கோரிக்கை
மண்பாண்ட தொழிலாளர்கள் மழை காலங்களில் தொழிலில் ஈடுபட முடியாது என்பதனால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் அந்த நிவாரண உதவி அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியாகியும் மழைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை.
அதுபோல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவி கிடைத்தது. ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 இன்னும் இவர்களுக்கு கிடைக்கவில்லையாம். எனவே வறுமையில் வாடும் தங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவையில் உள்ள நிவாரண உதவிகள் சரியான நேரத்தில் கிடைத்தால் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story