சென்னிமலை, கொடுமுடி, பர்கூரில் கொட்டி தீர்த்த மழை: ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
சென்னிமலை மற்றும் கொடுமுடி பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு,
சென்னிமலை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி அனல் காற்று வீசி வந்தது. இரவு நேரங்களிலும் வெப்பமாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 12.30 மணி வரை 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள மேட்டூர் ஓடையில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதே போல் உப்பிலிபாளையத்தில் உள்ள குட்டை நிரம்பி தண்ணீர் வெளியேறி தார்சாலை வழியாக சென்றது. இதனால் அந்த வழியே சென்ற பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘உப்பிலிபாளையம் குட்டையில் இருந்து வெளியேறும் கால்வாயின் குறுக்கே அங்குள்ள கோவிலுக்கு செல்வதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிய குழாயாக இருப்பதால் அதன் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி தார்சாலைக்கு வந்து விடுகிறது. எனவே, பெரிய குழாயோ அல்லது பாலமோ அமைத்து கால்வாயில் செல்லும் நீர் தார்சாலைக்கு வராமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
சென்னிமலை முருகன் கோவில் வனப்பகுதி வறண்டு கிடந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பசுமையாக மாறியது. தற்போது பெய்த மழையால் மேலும் பசுமையாக காட்சியளிக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கொடுமுடி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணி வரை 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மீண்டும் பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை பரவலாக லேசான மழை பெய்தது.
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை ஆகிய மலைப்பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வனக்குட்டைகள் 5-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு இனி தண்ணீர் பற்றாக்குறை வராது என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து உள்ளது. இதுபோல் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பும் உள்ளது. மழையால் ஈரோடு சூரம்பட்டிவலசு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் நேற்று தண்ணீர் அருவிபோன்று கொட்டியது. மேலும் பெரியசடையம்பாளையம் குளமும் நிரம்பி வழிந்தது. நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை விவரம் (மி.மீட்டர் அளவில்) வருமாறு:-
சென்னிமலை - 58
மொடக்குறிச்சி - 47
கொடுமுடி - 18.6
கோபி - 17
அம்மாபேட்டை - 16.8
தாளவாடி - 13
ஈரோடு - 6
கொடிவேரி - 5
பெருந்துறை - 4
பவானி - 2
பவானிசாகர் - 1.4
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story