நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார் - பரபரப்பு தகவல்கள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார். இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென்திருப்பேரை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் சில சிரமங்கள் இருந்தாலும், வாகன போக்குவரத்து குறைந்ததால் விபத்துகள் குறைவு, மாசு இல்லாத காற்று, மனதுக்கு இதமான அமைதி, குடும்பத்தினர், உறவினர்களிடம் மனம் விட்டு பேசுதல் போன்ற நன்மைகளும் கிடைத்து இருக்கிறது. அனைவரும் வீடுகளிலேயே இருப்பதாலும், போலீசாரின் தீவிர கண்காணிப்பாலும் திருட்டு சம்பவங்களும் வெகுவாக குறைந்து உள்ளன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததும், பின்னர் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி, போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்று மீண்டும் பிடிபட்ட சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி சித்திரை தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் நாகராஜன் (வயது 45). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், நாகராஜன் பணிக்கு செல்லாமல் வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக நாகராஜனின் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர், வீட்டின் கதவை திறந்து, அங்குள்ள பீரோவை திறக்க முயன்றார். சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் மற்றும் குடும்பத்தினர் ‘திருடன்... திருடன்...‘ என்று கூச்சலிட்டனர். உடனே அந்த நபர், வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து தப்பிச் செல்ல முயன்றார்.
மடக்கி பிடித்தனர்
எனினும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர், ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மாலையில் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நீதிபதி தமிழரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மாயாண்டியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாயாண்டியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். இதையொட்டி அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரவில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் மாயாண்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு மாயாண்டியை டாக்டர் பரிசோதித்தார். அப்போது மாயாண்டி இருமியவாறு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
தப்பி ஓட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் மற்றும் போலீசார், மாயாண்டியை கொரோனா வார்டில் அனுமதித்து, அவரது ரத்தம், சளி ஆகியவற்றை பரிசோதிக்க ஏற்பாடு செய்தனர். அந்த வார்டின் வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவு 10 மணி அளவில் மாயாண்டி கழிப்பறைக்கு சென்று வருவதாக டாக்டரிடம் கூறிச் சென்றார். ஆனால், கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகளை மெதுவாக கழட்டி, அந்த இடைவெளி வழியாக வெளியே வாறுகால் சகதியில் குதித்து தப்பி சென்றார். நீண்ட நேரமாகியும் கழிப்பறையில் இருந்து மாயாண்டி வெளியே வராததால், மருத்துவ பணியாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது, கழிப்பறை ஜன்னலின் வழியாக மாயாண்டி தப்பியது தெரியவந்தது.
சிக்கினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாயாண்டியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே மாயாண்டி, பாளையங்கோட்டையில் உள்ள மாமானாரின் வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளம் வழியாக தப்பி சென்றார். இதனை அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விடிய விடிய வேய்ந்தான்குளம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும், மாயாண்டி போலீசாரிடம் சிக்காமல் நழுவினார்.
இந்த நிலையில் மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் பதுங்கி இருந்த மாயாண்டியை போலீசார் நேற்று மதியம் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், கொரோனா வார்டில் இருந்து தப்பி சென்றதாக மாயாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பரபரப்பு
கைதான மாயாண்டி மீது செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருந்து தப்பிய கைதியை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story