திருப்பரங்குன்றம் பகுதிகளில் செங்கல் உற்பத்தி முடக்கம் - தொழிலாளர்கள் தவிப்பு
திருப்பரங்குன்றம் பகுதிகளில் செங்கல் உற்பத்தி முழுமையாக முடங்கி விட்டது. அதனால் அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளம் நிலையூர், தனக்கன்குளம், சிலைமான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கல் சூளை அதிகமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய்களில் சவடு, கரம்பை மண் தாராளமாக கிடைத்தது. ஆகவே செங்கல் சூளை தொழில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனால் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாது, செங்கல் அறுவை தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைத்தது.
இதே சமயம் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்ததால் அதன் மூலம் கொத்தனார், சித்தாள் போன்றவர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைத்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக மண் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக மாறிவிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான செங்கல் சூளை இருந்த இடத்தில் தற்போது பாதியாக குறைந்து விட்டது. இதனால் கிராமப்புறங்களில் செங்கல் சூளை தொழில் கொஞ்சம், கொஞ்சமாக நசுங்கி வருகிறது.
இந்தநிலையில் கொரோனா வைரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளியில் இருந்து மண் கொண்டு வரும் லாரி போக்குவரத்து இல்லாததால் செங்கல் சூளை பணி முடங்கி கிடக்கிறது. ஏற்கனவே தயாரான செங்கல்களும் சூளையில் இருந்து விற்பனைக்கு வெளியேற்ற முடியாத நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.
இதனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் மட்டுமல்லாது செங்கல் அறுவை கூலி தொழிலாளர்களும் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சில செங்கல் சூளைகளில் ஏற்கனவே இருக்கும் மண்களை கொண்டு செங்கல் உற்பத்தி செய்யப்பட்டாலும் ஊரடங்கு காரணமாக அவைகள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. ஊரடங்கினால் கட்டுமான தொழிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால், கொத்தனார், சித்தாள் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்களும் அன்றாட செலவுக்கு பணமில்லாமல் சிரமத்தில் உள்ளனர்.
கொரோனா பரவல் இல்லாத நிலை வரும் நாள் எப்போது? பணிகள் நடப்பது எப்போது? என்ற கேள்விகளுடன் செங்கல் சூளை தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story