கும்மிடிப்பூண்டி அருகே, சோதனைச்சாவடியில் மத்திய குழுவினர் ஆய்வு


கும்மிடிப்பூண்டி அருகே, சோதனைச்சாவடியில் மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2020 4:00 AM IST (Updated: 30 April 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் மத்திய குழுவினர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வந்து உள்ளனர். இந்தநிலையில் இந்த மத்திய குழுவைச் சேர்ந்த டாக்டர் அனிதா கோக்கர், டாக்டர் விஜயன் மற்றும் லேகேந்திர சிங் ஆகிய 3 பேர் நேற்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிக்கான நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள இந்த சோதனைச்சாவடியின் செயல்பாடு எப்படி உள்ளது?. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் எந்த எந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணியில் உள்ளனர்?. ஒரு ஷிப்டுக்கு எத்தனை பேர் பணி செய்கிறார்கள்?. அவர்களின் பணி என்ன?. இவ்வழியாக ஆந்திரா தவிர்த்து வேறு எந்தெந்த மாநிலங்களில் இருந்து வாகனங்கள் தமிழகத்துக்குள் வருகின்றன?. அப்படி வருகின்ற வாகனங்களின் ஒரு நாளைய சராசரி எண்ணிக்கை என்ன?. இவற்றுக்கான விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து எந்த வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன?. சோதனைச்சாவடிக்கு வந்த வாகன ஓட்டிகளில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதா?. கும்மிடிப்பூண்டி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?. அவர்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எத்தனை பேர்?. அவ்வாறு வீட்டுக்கு திரும்பியவர்களின் தற்போதைய நிலைமை என்ன? என்பது குறித்த விவரங்களையும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மத்திய குழுவினர் கேட்டு பதிவு செய்து கொண்டனர்.

இதையடுத்து கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அதிகாரிகளிடம் மத்திய குழுவினர் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த ஆய்வின்போது இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெகன்நாதன், மாவட்ட வருவாய் அதிகாரி முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் குமார், மருத்துவ அதிகாரி டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story