கடலூர் நகரில் முதியவருக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சுகாதார ஊழியர்கள் தீவிரம்


கடலூர் நகரில் முதியவருக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சுகாதார ஊழியர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 30 April 2020 3:42 AM IST (Updated: 30 April 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் நகரில் முதல் முறையாக 68 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சுகாதார மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவரது வீட்டைச் சுற்றி நோய் தடுப்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று வந்த மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் நகரில் முதல்முறையாக 68 வயது முதியவருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

வளைகாப்பு நிகழ்ச்சிக்காக...

கடலூர் பீச்ரோடு ரங்கநாதன் நகரைச் சேர்ந்த 68 வயது முதியவர் சமூக சேவைக்காக கடந்த மாதம் 14-ந்தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு தொண்டுகளை செய்து வந்தார். அப்போது அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முதியவர் தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறி ஆந்திர மாநில அரசிடம் இருந்து அனுமதி வாங்கினார். அதன்படி அந்த முதியவர், அவருடன் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி, பண்ருட்டியை சேர்ந்த தாய்-மகள் என மொத்தம் 6 பேர் கடந்த 24-ந் தேதி புட்டபர்த்தியில் இருந்து காரில் புறப்பட்டு 25-ந் தேதி கடலூர் வந்தனர்.

முதியவருக்கு உறுதி

இவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் 26-ந்தேதி இவர்களின் உமிழ்நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில், கடலூர் பீச்ரோட்டை சேர்ந்த 68 வயது முதியவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதுகாப்பு கவச உடை அணிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் விரைந்து சென்று வீட்டில் இருந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை கொரோனா வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்த முதியவரின் மனைவி மற்றும் 16 வயது பேரன் இருவரையும் தனிமைப்படுத்தி வைப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

முதியவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதையடுத்து புட்டபர்த்தியில் இருந்து அவருடன் வந்த 5 பேருக்கும் முதற்கட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லாமல் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தை சேர்ந்த கார் டிரைவரும் அங்கே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் திருவள்ளுவர் நகர் 12-வது குறுக்கு சந்து பகுதிக்குள் யாரும் செல்லாதவாறு தடுப்பு கட்டைகள் அமைத்து சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முதியவரின் வீட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. பிரதான சாலைகள், தெருக்களில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் வீடுகள், சாலை மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

27 ஆக உயர்வு

சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் யாராவது உள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று உறுதியாகி உள்ள முதியவர் மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆகியோருடன் தொடர்பில் இருந்த 20 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது கடலூர் பீச் ரோடு ரங்கநாதன் நகரைச் சேர்ந்த 68 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26-ல் இருந்து 27 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story