நெசவு நெய்யாததால் நிசப்தம் நிலவுகிறது: ஊரடங்கால், கேள்விக்குறியான நெசவாளர்களின் வாழ்க்கை


நெசவு நெய்யாததால் நிசப்தம் நிலவுகிறது: ஊரடங்கால், கேள்விக்குறியான நெசவாளர்களின் வாழ்க்கை
x
தினத்தந்தி 30 April 2020 4:16 AM IST (Updated: 30 April 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அறிவிப்பால் கும்பகோணத்தில், நெசவு தொழில் நடைபெறாமல் நிசப்தமே நிலவுகிறது. இதனால் 30 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

கும்பகோணம், 

ஊரடங்கு அறிவிப்பால் கும்பகோணத்தில், நெசவு தொழில் நடைபெறாமல் நிசப்தமே நிலவுகிறது. இதனால் 30 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

பட்டு நெசவுத்தொழில்

கொரோனா நோய் உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 36 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த ஊரடங்கால், ஆயிரக்கணக்கான தொழில்களும், பலகோடி தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரதான தொழிலாக விளங்கும் பட்டு நெசவுத்தொழிலும் ஒன்றாகும்.

காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு போன்று கும்பகோணம் பட்டுக்கென்று தனி சிறப்பு உண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவையை தமிழகத்தில் வசிக்கும் 6 கோடி குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் விரும்புவார்கள். மேலும் இங்கு தயாராகும் பட்டுப்புடவைகளுக்கு மதங்களை கடந்து நல்ல வரவேற்பு உண்டு.

பரம்பரை, பரம்பரையாக...

இந்து மதத்தினர் மட்டுமல்லாமல் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவையை விரும்பி உடுத்துவார்கள். பல்வேறு சிறப்புக்குரிய இந்த பட்டுபுடவைகளை உற்பத்தி செய்வதில் கும்பகோணத்தை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பத்தினர் பரம்பரை, பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடும்பங்களின் ஒரே தொழில் நெசவுத்தொழில் ஒன்றுதான்.

சவுராஷ்டிர சமுதாயத்தை சேர்ந்த இவர்கள், கடந்த 500 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவின் நெசவு மாநிலமான குஜராத்தில் இருந்து இடம்பெயர்ந்து நேரடியாக கும்பகோணத்திற்கு வந்து குடியேறியவர்கள். இவர்கள் குடியேறியதற்கு முக்கிய காரணமாக விளங்கியது தஞ்சை மாவடத்தின் செழிப்பு மற்றும் கும்பகோணத்தில் உள்ள நீர் மேலாண்மையே ஆகும்.

பல கோடி ரூபாய் வருமானம்

பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த தொழிலில் கும்பகோணத்தை சேர்ந்த 1 லட்சம் பேர் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாதத்திற்கு 2 புடவையில் இருந்து 5 புடவை வரை நெசவு செய்து வியாபாரியிடம் கொடுப்பார்கள்.

அதற்கு வியாபாரி கொடுக்கும் கூலியை வைத்து தங்களது குடும்ப செலவுகளை சமாளிப்பார்கள். இவ்வாறாக மாதத்திற்கு பல கோடி ரூபாய் வரையில் நெசவு கூலியாக இந்த 30 ஆயிரம் குடும்பத்திற்கும் வருவாய் கிடைத்து வந்தது.

கேள்விக்குறியான வாழ்க்கை

இந்த நிலையில் கொடிய நோயாக வந்த கொரோனாவால் இந்த குடும்பங்கள் அனைத்தும் கடந்த 36 நாட்களாக வேலையில்லாமல், வருமானத்திற்கும் வழியில்லாமல் தவித்து வருகிறது. அரசு வழங்கிய ரூ1,000 உதவித்தொகையை வைத்து இவர்கள் அனைவரும் கடந்த 36 நாட்களை மிகுந்த சிரமத்துக்கிடையில் வாழ்க்கையை கழித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது.

கும்பகோணம் சவுராஷ்டிரா தெரு, துவரங்குறிச்சி, தோப்புத்தெரு ஆகிய தெருக்களில் உள்ள நெசவு தறிகள் எல்லாமல் ஆடாமல், அசையாமல்(ஓடாததால்) நின்ற நிலையிலேயே உள்ளன. இந்த தெருக்களில் எப்போதும் தறி ஓடும் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஊரடங்கு உத்தரவு காரணமாக தறிகள் ஓடாததால் இந்த பகுதிகளில் சத்தம் இன்றி நிசப்தமே நிலவுகிறது.

மீண்டும் ஒலிப்பது எப்போது?

இதே நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு நெசவாளியும் தங்களது அடிப்படை தேவைக்கு பணம் இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரவேண்டிய பட்டு, ஜரிகை ஆகியவைகளின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நெசவாளர்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒவ்வொரு நாள் பொழுதும் தறி ஓடும் சத்தத்திலேயே இவர்களது வாழ்க்கை நகர்ந்து வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தறிகள் ஓடாததைப்போன்று இவர்களது வாழ்க்கையும் சீராக ஓடாமல் உள்ளது. இந்த நிலை மாறி தங்கள் வீடுகளில் உள்ள நெசவு தறிகள் முன்பு போல் எப்போது ஓடும்? தங்கள் வாழ்க்கையும் எப்போது சீராகும்? என்று இவர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story