கூடலூரில் ஊரடங்கை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ ஆர்.டி.ஓ. எச்சரிக்கை


கூடலூரில் ஊரடங்கை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ ஆர்.டி.ஓ. எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 April 2020 4:46 AM IST (Updated: 30 April 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஊடலூரில் ஊரடங்கை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊரடங்கை மீறி ஜவுளி, செல்போன், நகை, மின்சாதன பொருட்கள் உள்பட அத்தியாவசிய தேவையில்லாத பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன.

இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரித்தது. சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்ததை காண முடிந்தது. கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனால் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் இருந்தது.

எச்சரிக்கை

இந்த நிலையில் கூடலூரில் நேற்று காலை 11.30 மணியளவில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி ராஜகோபாலபுரம் முதல் புதிய பஸ் நிலையம் வரை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மேலும் கோழிக்கோடு சாலை, துப்புக் குட்டி பேட்டை, செம்பாலா உள் ளிட்ட பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.

உடனே அந்த கடைகளின் உரிமையாளர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கடைகளை அடைக்க உத்தரவிட்டதோடு, இனிமேல் ஊரடங்கை மீறி திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. எச்சரித்தார். அதன்படி கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. மேலும் அங்கு சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

Next Story