மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது - பலி 432 ஆக உயர்வு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது - பலி 432 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 April 2020 4:51 AM IST (Updated: 30 April 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது. இதில் பலி எண்ணிக்கை 432 ஆக உயர்ந்தது.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று புதிதாக 597 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 915 ஆகி உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி இருப்பது மாநில மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொரோனாவுக்கு நேற்று 32 பேர் பலியானார்கள். இதனால் இதுவரை 432 பேர் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் 1,593 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதில் அதிகப்பட்சமாக மும்பையில் 475 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 170 பேருக்கான சோதனைகள் தனியார் ஆய்வகங்களில் கடந்த 26, 27-ந் தேதி செய்யப்பட்டவை ஆகும். நேற்று தான் அந்த முடிவுகள் வந்து உள்ளன. இதன் மூலம் மும்பையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 457 ஆகி உள்ளது.

இதேபோல நிதிதலைநகரில் மேலும் 26 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 10 பேர் கடந்த வாரம் உயிரிழந்தவர்கள் ஆவர். அவர்களின் சோதனை முடிவுகள் தற்போது தான் வந்துள்ளன.

இதேபோல பலியானவர்களில் 21 பேர் ஆண்கள். 5 பேர் பெண்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது.

சிறப்பு ஆஸ்பத்திரிகள்

இதேபோல மும்பையில் நேற்று 193 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதன்மூலம் நோய்தொற்றில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,427 ஆகி உள்ளது.

மும்பையில் 29 கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டுள்ளதாவும், அதில் 2 ஆயிரத்து 602 படுக்கைகள் உள்ளதாகவும் மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Next Story