14 நாட்களுக்கு பிறகு பரபரப்பு குமரியில் முதியவருக்கு கொரோனா கிராமத்தை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை


14 நாட்களுக்கு பிறகு பரபரப்பு குமரியில் முதியவருக்கு கொரோனா கிராமத்தை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 April 2020 5:26 AM IST (Updated: 30 April 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

14 நாட்களுக்கு பிறகு குமரியில் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வசித்த கிராமத்தை ‘சீல்‘ வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

களியக்காவிளை,

14 நாட்களுக்கு பிறகு குமரியில் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வசித்த கிராமத்தை ‘சீல்‘ வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் வசித்த நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன் தெரு, அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டன. இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்த நபர்கள் யாரும் இந்த பகுதிக்கு உள்ளே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

மேலும் சுகாதாரத்துறையினர் கொரோனா பாதித்த பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். தினமும் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் காய்ச்சல், சளி பாதிப்பு இருக்கிறதா? எனவும் கண்காணிக்கப்பட்டது.

10 பேர் குணமடைந்தனர்

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 பேர், அதன் பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இதனால் தற்போதைய நிலவரப்படி 6 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அவர்களும் இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்பி விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இது குமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது. அதே சமயத்தில், வெளியூரில் இருந்து வரும் நபர்களால் குமரியில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி உள்பட பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

முதியவருக்கு புதிதாக தொற்று

இந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு குமரியில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதாவது, மார்த்தாண்டம் மேல்பாலை அருகே மாங்காலை கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் முதலில் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். எனினும் வயிற்றுவலி குறையாததால் கேரள மாநிலம் பாறசாலை அரசு ஆஸ்பத்திரி சென்ற அவர், தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அவருக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குடும்பம் தனிமைப்படுத்துதல்

இந்த தகவலை கேரள சுகாதாரத்துறையினர், தமிழக அரசுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையை உஷார்படுத்தியது. உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மாங்காலை கிராமத்திற்கு விரைந்து சென்று முதியவரின் வீட்டை தனிமைப்படுத்தினர்.

முதியவருடன் அவருடைய மனைவி, 2 மகன்கள், மகள், மருமகள், அவருடைய பேரன்கள் ஆகியோர் வசித்ததாக தெரிகிறது. முதியவரின் மகள் நர்சாக கேரள மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏதேனும் பரவி இருக்கலாம் என்று கருதி அவர்களுடைய ரத்தம், சளி மாதிரி எடுக்க சுகாதாரத்துறையினர் அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டனர்.

பரவியது எப்படி?

முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது. அவர் வசித்த சுற்று வட்டார பகுதியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது. இவர் சிகிச்சைக்காக கேரளாவுக்கு செல்வதால் அங்குள்ள நபர் மூலமாக முதியவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் அதனை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை.

முதியவர், அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பாறசாலை அரசு ஆஸ்பத்திரி, நெய்யாற்றின்கரை தனியார் ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கும் சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை திருவனந்தபுரம் மாவட்டம், குமரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மாங்காலை கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளது.

பரபரப்பு

ஊரடங்கு வருகிற 3-ந் தேதி முடிவடைகிறது. அதற்குள் ஆசாரிபள்ளத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து அனைவரும் வீடு திரும்பி விடுவர். கொரோனா இல்லாத மாவட்டமாக குமரி மாறிவிடும் என்ற நம்பிக்கையில் டாக்டர்கள், அதிகாரிகள் இருந்தனர்.

இதற்கிடையே 14 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story