பயன்படுத்திய முக கவசத்தை தீவைத்து எரித்து அழிக்க வேண்டும் குப்பை கழிவுகளுடன் கலந்தால் அபராதம் - பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு
பயன்படுத்திய முக கவசத்தை தீவைத்து எரித்து அழிக்க வேண்டும். அதனை மீறி குப்பை கழிவுகளுடன் அவற்றை கலந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் வீடுகளில் இருந்து வெளியே வரும் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும், சமூகவிலகலை கடைப்பிடிக்கவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் முககவசம் அணிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூருவில் குப்பை கழிவுகளுடன், பயன்படுத்தப்பட்ட முககவசத்தை கலந்து கொடுத்து வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குப்பை கழிவுகளை சேகரிக்க செல்லும் துப்புரவு பணியாளர்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் குப்பை கழிவுகளுடன் பயன்படுத்தப்பட்ட முககவசத்தை கலக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அபராதம் விதிக்கப்படும்
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் டி.ரன்தீப் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது. பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பொதுமக்கள் தீவைத்து எரித்து அழிக்க வேண்டும். அதை விடுத்து அதனை குப்பை கழிவுகளுடன் சேர்த்து வழங்க கூடாது. அதை மீறியும் குப்பை கழிவுகளுடன், யாராவது பயன்படுத்திய முக கவசங்களை யாராவது வழங்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதாவது முதல் முறையாக அவ்வாறு செய்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அதன் பிறகும் குப்பை கழிவுகளுடன் பயன்படுத்திய முக கவசத்தை வைத்து வழங்கினால் ரூ. 1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். அத்துடன் அந்த நபர்களின் வீடுகளில் சேரும் குப்பைகள் சேகரிக்கப்படாது. கொரோனா மருத்துவ கழிவுகளை அழிப்பது சவாலானது.
3,100 டன் குப்பை கழிவுகள்
எனவே பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் முககவசத்தை கட்டாயம் தீவைத்து எரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குப்பை கழிவுகளுடன் முக கவசத்தை கலக்க கூடாது. கொரோனா ஊரடங்கால் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாநகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் குறைந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 3,100 டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story