கூடங்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் அணு மின்நிலையத்திற்குள் நுழைந்த 2 வடமாநில தொழிலாளிகள் கைது
கூடங்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் அணு மின்நிலையத்திற்குள் நுழைந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்,
கூடங்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் அணு மின்நிலையத்திற்குள் நுழைந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அணு மின்நிலையம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 3, 4-வது அணுஉலைகளும் அமைக்கப்பட உள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அணுமின் நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு, பகலாக ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் வடமாநில தொழிலாளர்களும் அடங்குவர். இவர்களுக்கான குடியிருப்பு பகுதி, அணுமின் நிலைய வளாகத்தின் அருகே அமைந்துள்ளது. அணுமின் நிலைய வளாகத்துக்கும், குடியிருப்பு பகுதிக்கும் இடையே தடுப்புச்சுவர் உள்ளது.
உள்ளே நுழைந்தனர்
தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேர் தடுப்புச்சுவரை தாண்டி ஏறி குதித்து அனுமதியின்றி அணு மின்நிலையத்துக்கு உள்ளே நுழைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அவர்கள் இருவரையும் பிடித்து கூடங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம் நவரங்கூர் மாவட்டம் காஞ்சிகோடா பகுதியை சேர்ந்த கமல்சே ஜானி மகன் ஷோபா ஜானி (வயது 18), பவுதி மாவட்டம் படாகஸ் சந்த் பகுதியை சேர்ந்த கிரிதாரிரானா மகன் சரோஜ் ரானா (19) என்பதும், அவர்கள் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது.
கைது
பின்னர் இதுபற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் காத்தான்த் சிங் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். ஊரடங்கு நேரத்தில் அணுமின் நிலையத்துக்குள் 2 வடமாநில தொழிலாளர்கள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story