ஊரடங்கு எதிரொலி: திருச்சி மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது


ஊரடங்கு எதிரொலி: திருச்சி மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது
x
தினத்தந்தி 30 April 2020 8:24 AM IST (Updated: 30 April 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

திருச்சி, 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

விபத்து வழக்குகள்

திருச்சி மாநகரத்துக்கு உட்பட்டு 14 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், 6 குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களும், 4 மகளிர் போலீஸ் நிலையங்களும், 2 போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையங்களும் உள்ளன. மாநகர பகுதிகளில் நடைபெறும் விபத்துகள் குறித்து வடக்கு, தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த இரு போலீஸ் நிலையங்களிலும் மாதந்தோறும் சராசரியாக 25 முதல் 30 விபத்து வழக்குகள் வரை பதிவாகும். மாதத்துக்கு 7 பேர் முதல் 10 பேர் வரை விபத்தினால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறும்.

ஊரடங்கு

இந்தநிலையில் கடந்த மாதம் (மார்ச்) 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் விபத்து வழக்குகள் பெருமளவு குறைந்துள்ளது. தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இதுவரை 4 வழக்குகளும், வடக்கு போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இதில் இரு போலீஸ் நிலையங்களிலும் தலா 2 பேர் வீதம் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக ஊரடங்கு காலகட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தானாக தடுமாறி விழுந்து காயம் அடைதல், சாலையில் நடந்து செல்பவர் மீது மோதுதல் போன்ற சிறு, சிறு விபத்து வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட புறநகர் பகுதிகளிலும் பெருமளவு விபத்துக்கள் குறைந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story