கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் திருச்சி தொழிலாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகாரிகள் குழு பரிசீலனை


கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் திருச்சி தொழிலாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகாரிகள் குழு பரிசீலனை
x
தினத்தந்தி 30 April 2020 9:02 AM IST (Updated: 30 April 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் திருச்சி தொழிலாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் குழு பரிசீலனை செய்து வருகிறது.

திருச்சி, 

கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் திருச்சி தொழிலாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் குழு பரிசீலனை செய்து வருகிறது.

தொழிலாளிக்கு கல்லீரல் பாதிப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி நித்தியானந்தபுரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(வயது 38). இவர் கோவில் திருவிழா காலங்களில் சாமிக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரனுக்கு மஞ்சள் காமாலை வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் புவனேஸ்வரனை சென்னைக்கு அழைத்து சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மீண்டும் அவரை பரிசோதித்துவிட்டு உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், உறுப்பு தானம் தருவதற்கு குடும்பத்தில் யார்? தயாராக இருக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவரது மனைவி சாவித்திரி தான் உறுப்பு தானம் தர தயாராக இருப்பதாக டாக்டர்களிடம் கூறினார்.

கண்ணீர் மல்க கோரிக்கை

இதையடுத்து, அவரால் உறுப்பு தானம் செய்ய முடியுமா? என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தது. ஆனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சுகாதாரத்துறையில் உள்ள குழு பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை குழு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்காததால் புவனேஸ்வரனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. இதனால் புவனேஸ்வரனின் மனைவி தனது கணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

அதிகாரிகள் குழு பரிசீலனை

இதுகுறித்து புவனேஸ்வரனின் மனைவி சாவித்திரி கூறுகையில், “கொரோனா வைரஸ் காரணமாக எனது கணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு அனுமதி அளிக்காமல் இருந்தனர். இந்தநிலையில் தற்போது அதிகாரிகள் குழு அனுமதி அளிப்பதாகவும், இது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்துவிட்டு தகவல் தெரிவிப்பதாகவும் எங்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். எனது கணவரை பிழைக்க வைக்க இதுவரை பல லட்சங்கள் செலவு செய்துள்ளோம். எங்களுக்கு அரசு சார்பில் உதவி செய்து எனது கணவரின் உயிரை காப்பாற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story