கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த சொர்ணாநகரில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி போராட்டம்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த சொர்ணாநகரில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 30 April 2020 9:36 AM IST (Updated: 30 April 2020 9:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த சொர்ணாநகரில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, கடந்த 1-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார். இதன் காரணமாக அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், பி.சி.பி. நகர், கோட்டைமேடு, காலாந்தோட்டம், சிவகாமி நகர், கண்ணம்மா தோட்டம், அருந்ததிபுரம், சொர்ணா நகர் முழுவதும் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 14-ந் தேதி தெரிவித்திருந்தார். அதன்படி 14 நாட்களுக்கு பின் கடந்த 15-ந் தேதி சொர்ணா நகர் பகுதியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தடுப்புகளை அகற்றி, கட்டுப்பாடுகளை தளர்த்தினார். ஆனால் சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் சிறிது நேரத்திலேயே சொர்ணாநகர் நுழைவு வாயில் மீண்டும் மூடப்பட்டது.

போராட்டம்

சுமார் ஒரு மாதமாக சொர்ணா நகர் பகுதியில் உள்ள வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு வராத நிலையில், அந்த பகுதி தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். முதியவர்கள், நோயாளிகள் பலர் அங்கு உள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்வதற்கான கருவிகள் அங்குள்ள முகாமில் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சொர்ணாநகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை நுழைவு வாயில் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் அங்கு வந்து, கூடியிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நல்ல முடிவு எடுக்கப்படும்

நோய் பாதிப்பு உள்ள சொர்ணா நகரை மட்டும் சீல் வைத்து கண்காணிக்கலாம். சுற்றியுள்ள மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களை ஏன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளர்கள். எந்தவித முடிவும் தெரியாமல் கட்டுப்பாடுகளுடன் இருந்து வருகிறோம். எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று மக்கள் ஆவேசமாக கூறினர். இதற்கு பதிலளித்து பேசிய ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., உங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் தெரிவித்து, நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story