புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? நாராயணசாமி தலைமையில் மே 2-ந் தேதி அமைச்சரவை கூடி முடிவு


புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? நாராயணசாமி தலைமையில் மே 2-ந் தேதி அமைச்சரவை கூடி முடிவு
x
தினத்தந்தி 30 April 2020 4:18 AM GMT (Updated: 30 April 2020 4:18 AM GMT)

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? சில மாவட்டங்களில் தளர்வுகள் அனுமதிக்கப் படுமா? என்பதுபற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி இறுதி முடிவு எடுக்கிறது.

புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் கடந்த 11-ந்தேதி புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27-ந்தேதி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவர் கேட்டறிந்தார். சில மாநிலங்கள், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை கூட்டம்

இந்த நிலையில் நேற்று இரவு புதுவை அமைச்சரவை கூட்டம் சட்டசபை கேபினட் அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 3-வது முறையும் கிருமி நாசினி தெளிக்க கூறியுள்ளோம். தற்போது முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிக்கும்போது அவர்களுக்கு முக கவசத்தை இலவசமாக வழங்க கூறி உள்ளேன்.

தாசில்தார் ஒருவர், காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 6-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளேன். இதில் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம்

வெளி மாநிலங்களில் சிக்கி இருப்பவர்களை அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசில் இருந்து வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி மாணவிகளையும், வாரணாசியில் உள்ள வயதானவர்களையும் அழைத்து வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசின் செலவிலேயே வாகனங்களில் அழைத்து வரப்படுவார்கள்.

மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அந்த அரிசியை ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுத்து அவர்கள் மூலமாகவே வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இறுதி முடிவு

மத்திய நிர்வாகத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வருகிற 3-ந் தேதிக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தேன். வரும் காலங்களில் முழுமையான ஊரடங்கு சாத்தியமாகாது. படிப்படியாக கடைகள், தொழிற்சாலைகளை திறக்க ஊரடங்கை தளர்த்த கூறினேன். இதுதொடர்பாக நாளை மறுநாள் (சனிக் கிழமை) எங்களது அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் 1,600 தொழிற்சாலைகளை திறக்க வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

நீடிக்குமா?

மே 2-ந்தேதியன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. மே 3-ந்தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதற்கு முந்தைய நாள் அமைச்சரவையை முதல்-அமைச்சர் கூட்டியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மே 3-ந்தேதிக்கு பிறகான ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இதில் சில இனங்களில் மாநிலங்களே முடிவெடுக்க அனுமதிக்கலாமா? என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப புதுச்சேரி அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இதற்காக அமைச்சரவை மே 2-ந்தேதி கூட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்குமா? தொற்று குறைவாக உள்ளதால் மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா? என்பது போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story