ஊரடங்கால் முடங்கிப்போன நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை


ஊரடங்கால் முடங்கிப்போன நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை
x
தினத்தந்தி 30 April 2020 5:31 AM GMT (Updated: 30 April 2020 5:31 AM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அவதரித்த திருத்தலமாகும். இங்கு சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக நெசவு தொழில் உள்ளது. சிலர் விவசாயமும் செய்து வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் தறிபோட்டு நெசவு தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் சுமார் 1000 பேர் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெசவுத்தொழில் செய்யப்படவில்லை. இங்கு உற்பத்தி செய்யும் லுங்கிகள் மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது உற்பத்தி செய்யப்பட்ட லுங்கிகள் தேக்கமடைந்து காணப்படுகிறது. காரணம் போக்குவரத்து இல்லை. இவர்கள் உற்பத்தி செய்த லுங்கிகளை உரிமையாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இவர்களுக்கு வேலை இல்லை. அதனால் தொழில் இன்றியும் வருமானம் இன்றியும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

மும்பைக்கு சென்று கற்றனர்

இதுகுறித்து நெசவு தொழிலாளர்கள் கூறியதாவது:-

காங்கேயநல்லூரில் கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக நாங்கள் நெசவுத் தொழில் செய்து வருகிறோம். அந்த காலத்தில் முதலில் கைத்தறி தான் இருந்தது. அதன்பிறகு மும்பை சென்று சிலர் விசைத்தறி இயக்க கற்று வந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது எல்லோரும் விசைத்தறியில் தான் லுங்கியை நெய்து வருகிறோம். ஒரு நாளைக்கு 12 லுங்கி தான் நெய்ய முடியும். அதுவும் மின் தடை இல்லாமல், தறியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.200-ல் இருந்து ரூ.250 வரை கூலி கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்துதான் நாங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.

இங்கு நாங்கள் உற்பத்தி செய்யும் லுங்கிகள் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ரம்ஜான் மாதத்தில் அதிக அளவு லுங்கிகளை உற்பத்தி செய்வோம். நிறுவனங்களும் அதிக அளவில் விற்பனை செய்யும். ஏனென்றால் பலர் லுங்கிகளை வாங்கி ஏழைகளுக்கு கொடுப்பார்கள்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த ஊரடங்கு உத்தரவால் தொழிலும் இல்லை. உற்பத்தியும் இல்லை. உற்பத்தி செய்த லுங்கிகளும் அப்படியே தேங்கி உள்ளன. போக்குவரத்து இல்லாததால் உரிமையாளர்கள் இதனை எடுத்துச் செல்லமுடியவில்லை. மேலும் எங்களுக்கு பாவும் கொடுக்கவில்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

ஜூன் மாதம் வந்து விட்டால் எங்கள்பாடு இன்னும் திண்டாட்டம் ஆகிவிடும். எங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட வேண்டும். அவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் வாங்கி கொடுக்க வேண்டும். எங்களுக்கு வாழ்வாதாரமே இல்லாதபோது அவர்களுக்கு எப்படி கல்விக்கட்டணம் கட்டுவோம்? நினைக்கும் போதே மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

எனவே, அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் முதலில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேக்கமடைந்து உள்ள லுங்கிகளை எடுத்து செல்லவும் அதனை விற்பனை செய்யவும் அரசு அனுமதி வழங்க வேண்டும். வருகிற 3-ம் தேதிக்கு பிறகாவது சிறு, குறு தொழில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எங்களுடைய வாழ்க்கை ஓரளவுக்கு சீர்படும். உற்பத்தி செய்த லுங்கிகளை விற்றால்தான் எங்களுக்கு உரிமையாளர்கள் கூலி கொடுப்பார்கள்.

அரைடவுசர்

இது ஒருபுறமிருக்க தற்போது லுங்கிகள் கட்டுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. காரணம் தற்போதைய இளைஞர்கள் நவநாகரீகம் என்ற பெயரில் அரை டவுசர் அதாவது பர்முடாசை அணிகின்றனர். வேட்டி வாரம் என சொல்லி அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல லுங்கி வாரம் என அறிவித்து லுங்கிகள் விற்பனைக்கும் மத்திய மாநில அரசுகள் உதவிபுரிய வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story