கொரோனா ஊரடங்கால் தாரை, தப்பட்டை இல்லாமல் ஆரவாரமற்ற இறுதி ஊர்வலங்கள்


கொரோனா ஊரடங்கால் தாரை, தப்பட்டை இல்லாமல் ஆரவாரமற்ற இறுதி ஊர்வலங்கள்
x
தினத்தந்தி 30 April 2020 11:13 AM IST (Updated: 30 April 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் தாரை, தப்பட்டை இல்லாமல் இறுதி ஊர்வலங்கள் ஆரவாரமற்று குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களுடனேயே நடக்கிறது.

ராணிப்பேட்டை,

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

இப்படி எல்லாம் மாறுமா என்று நினைக்கக் கூட தோன்றாத வகையில் பல்வேறு பெரும் மாற்றங்களை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தி மாற்றத்தை நூற்றாண்டின் மக்களுக்கு காட்டியுள்ளது.

பஸ், ரெயில், விமான போக்குவரத்து இல்லை. அனைத்து வித பொருள்களுக்கான கடைகள், சந்தைகள் இல்லை, திருமணம், விருந்து, பார்ட்டி, கூட்டங்கள் உள்பட ஆடம்பர நிகழ்ச்சிகள் இல்லை. இவ்வாறு பெரும்பாலானவை இல்லை என்ற நிலையை கண்முன் காட்டியுள்ளது இந்த கொரோனா. ஏன் எளிமையான துக்க நிகழ்வுகள் கூட தற்போது மிக மிக எளிமையாக்கி வரலாற்றில் மிக முக்கியமான பதிவாக மாறக்கூடிய மாற்றங்களையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது கொரோனா.

இறுதி ஊர்வலம்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விலும் இறுதி நிகழ்வு என்பது இறுதி ஊர்வலம் தான். அந்த இறுதி ஊர்வலம் தான் அந்த மனிதன் எத்தகைய வாழ்வை வாழ்ந்துள்ளான் என்பதை உலகிற்கு காட்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அத்தகைய இறுதி ஊர்வலத்தையும் மாற்றிவிட்டது இந்த கொரோனா.

இந்த இறுதி ஊர்வலம் என்பது முதியோர்கள், மிராசுதார்கள் என உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்ந்தவர்களுக்கு சில சமூகங்களில் முக்கியமாதாக இருக்கும். காதை பிளக்கும் சரவெடி சத்தம், ராகத்துடன் இசைக்கும் தாரை, தப்பட்டை, ஆட்டம், பாட்டம் என அமர்க்களமாக செல்வார்கள்.

உணர வைக்கிறது

ஆனால் கொரோனாவின் தாக்கம், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க செய்து விட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் நபர்கள் இறுதி ஊர்வலம், இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் மிக சில நபர்களே தற்போது இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்கின்றனர். வெளியூர்களிலிருந்து உறவினர்களும் வர முடியாத நிலையில் அருகில் உள்ளவர்களுடன் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களுடனேயே இறுதி ஊர்வலம் நடக்கிறது. தாரை, தப்பட்டை இல்லாததால் அதனை நம்பிய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். பட்டாசு விற்பனையும் முடங்கிவிட்டது.

ராணிப்பேட்டையில் நேற்று மதியம் சென்ற இறுதி ஊர்வலம் ஒன்று, பார்ப்பவர்களுக்கு கொரோனாவின் தாக்கத்தை உணரவைப்பதாக இருந்தது.


Next Story