மே 3-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
மே 3-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.
கோவில்பட்டி,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதேபோன்று மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், உள்ளாட்சி துறையினருடன் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். இதனால்தான் இந்தியாவிலேயே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையிலும் 3 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 70 வயதை கடந்த மூதாட்டி இறந்து விட்டார். மற்ற 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடித்தால், தூத்துக்குடி மாவட்டம் விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறும். அதன்பிறகு பச்சை மண்டலத்துக்கு மாறும்.
ஊரடங்கு நீட்டிப்பா?
வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களது ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் சுமார் 200 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்குரிய ஆய்வக வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்துக்கு தந்துள்ளார்.
எவரேனும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை பொதுமக்கள் தங்களது கடமையாக நினைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க முடியும். மே 3-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். தமிழக அரசு அமைத்துள்ள சுகாதார குழுவினர் மாவட்டந்தோறும் கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, ஊரடங்கை தளர்த்துவது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story