ஊரடங்கால் மண்பானைகள் விற்பனை பாதிப்பு


ஊரடங்கால் மண்பானைகள் விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 1 May 2020 4:15 AM IST (Updated: 30 April 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கால் மண்பானைகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, 

தமிழர் பாரம்பரிய பொருட்களில் ஒன்று மண்பானை. சமையல் முதல் குதிர் வரை மண்ணிலேயே செய்து தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். அலுமினியம், எவர்சில்வர் என்று உலோகப்பொருட்களின் வருகை மண்பானைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எதிர்பாராமல் விழுந்தால் உடைந்து விடும் மண்பானைக்கு மாற்றாக அலுமினிய பானைகளுக்கு மாறிய மக்கள், தற்போது குக்கர்களுக்கு மாறிவிட்டனர்.

அதுவும் மின்சார குக்கர்கள் சமீப காலமாக புகழ் அடைந்து வருகின்றன. சில முக்கிய தேவைகளுக்காக மட்டுமே மண்பானைகளின் அவசியம் இருந்து வந்தது. இதனால் மண்பானை தொழில் நசிந்து விட்டது என்றால் மிகையல்ல. ஆனால் சமீப காலமாக பாரம்பரியத்தை நோக்கி பலரும் திரும்பி இருப்பது மண்பானைகளுக்கு கிராக்கியை ஏற்படுத்தி இருக்கிறது.

மண்பானை சமையல் என்று பல ஓட்டல்கள் தொடங்கப்பட்டு இருப்பது கூட மண்பானைகள் வாங்க இளைய தலைமுறைகளை உற்சாகப்படுத்தி வருகிறது. இதனால் பாரம்பரியமாக மண்பானை தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சற்று வருவாய் கிடைத்து வந்தது.

ஈரோட்டில் சில இடங்களில் மண்பானை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அவ்வப்போது மக்கள் வந்து தங்களுக்கு தேவையான அளவில் பானைகள் வாங்கிச்செல்வதை பார்க்க முடியும். ஆனால் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் ஈரோடு மாவட்டத்தில் மண்பானைகள் விற்பனை செய்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மண்பானை கடை வைத்து இருக்கும் மாதேஸ்வரன், தங்கமணி தம்பதியர் கூறியதாவது:-

மண்பானை தொழில் மிகவும் நலிந்து இருக்கிறது. முசிறி, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் இருந்து மண்பானைகள் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். சமீபகாலமாக சமைப்பதற்கு என்று பலரும் பானைகள் வாங்க வருவது உண்டு. குறிப்பாக சர்க்கரை நோய் பாதித்தவர்கள் அதிக அளவில் மண்பானைகளை வாங்கிச்செல்கிறார்கள்.

கோடை காலத்தில் தண்ணீர் வைக்கவும் பானைகள் அதிகம் விற்பனையாகும். இது எங்கள் குடும்பத்துக்கு போதிய வருவாயாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், விற்பனை மிகவும் பாதித்து இருக்கிறது. கடையை பகல் 12 மணிக்கு மேல் திறந்து வைத்திருக்கக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் உள்ளது. எனவே ஊரடங்கின்போது மண்பானை விற்பனையாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story