கிருஷ்ணகிரியில் டாக்டரின் மனைவி உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
கிருஷ்ணகிரியில் டாக்டரின் மனைவி உள்பட 11 பேருக்கு நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஒரு பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர் கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டு கடந்த 28-ந் தேதி மீண்டும் விழுப்புரத்திற்கு பணிக்கு சென்றார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள அவரது டாக்டர் மனைவி, மேலும் தந்தை ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் செய்யப்பட்டது. அதேபோல அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 9 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் 11 பேருக்கும் நடந்த பரிசோதனை முடிவுகள் நேற்று பிற்பகல் தெரிய வந்தன. அதன்படி டாக்டரின் மனைவி, அவரது தந்தை உள்பட 11 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் பரிசோதிக்கப்பட்ட 11 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்தது. இன்னும் 7 நாட்களுக்கு பிறகு அவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு பரிசோதனை செய்யப்படும். அதுவரையில் அவர்கள் 11 பேரும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மேலும் அந்த பகுதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். 7 நாட்களுக்கு பிறகு பரிசோதனையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தால், அதன்பிறகு அந்த பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story