ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாய்க்கால் சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாய்க்கால் சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 1 May 2020 3:51 AM IST (Updated: 1 May 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாய்க்கால் சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாய்க்கால் சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பிற்ப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை அமலில் உள்ளது. 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தொடருமா? அல்லது விலக்கி கொள்ளப்படுமா? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. 100 நாள் வேலைத்திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை ஆலைகள் செயல்படலாம், கட்டுமான தொழில்கள் விதிகளை பின்பற்றி செயல்படலாம் என்று அறிவித்து அதன்படி இவைகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

வாய்க்கால் சீரமைப்பு பணி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வெண்ணாற்றில் இருந்து கச்சமங்கலம் கிராமத்தில் இருந்து பிரிந்து செல்லும் 27 கிலோ மீட்டர் நீள பிள்ளை வாய்க்கால் ரூ.16 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் 2019-ம் ஆண்டில் தொடங்கின.

இந்த நிலையில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. மேட்டூர் அணை கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்ட நிலையில் பிப்ரவரி மாத கடைசி் வாரத்தில் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கின. இந்த பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பொக்லின் எந்திரம், மண்தள்ளும் எந்திரம், கலவை போடும் எந்திரம். மண்ணை சமப்படுத்தும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கியது.

உடனடியாக தொடங்கப்படுமா?

இந்த நிலையில் மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளில் இருந்து பணிகள் நடைபெறவில்லை. பிள்ளை வாய்க்கால் நடுவே எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாய்தள பணிகள், தரைதள பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிகள் பிள்ளைவாய்க்காலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு ஏதும் பூதலூர் தாலுகா பகுதியில் இதுவரையில் இல்லாத நிலையில் இந்த பணிகள் தொடங்கப்படுமா? என்று விவசாயிகள், சமுக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 100 அடிக்கு மேல் உள்ளது. இந்த வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு என வரவழைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டால் பணிகளை விரைந்து முடிக்க இயலும். பருவமழை நல்ல முறையில் பெய்து குறுவைக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டால் இந்த ஆண்டிலும் பிள்ளைவாய்க்கால் பணிகள் நிறைவு பெறாது. விவசாயிகளின் நன்மை கருதி ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி விடப்படாமல் உடனடியாக பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்று பிள்ளைவாய்க்கால் பாசன விவசாயிகள் கோருகின்றனர்.

Next Story