வாகன காப்பகங்களில் இருந்து எடுத்து செல்லப்படாமல் 37 நாட்களாக நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்கள்
ஊரடங்கு காரணமாக 37 நாட்களாக வாகன காப்பகங்களில் இருந்து எடுத்து செல்லப்படாமல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
தஞ்சாவூர்,
ஊரடங்கு காரணமாக 37 நாட்களாக வாகன காப்பகங்களில் இருந்து எடுத்து செல்லப்படாமல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றை எடுப்பதற்கு ஆள் வராததாலும், புதிதாக வாகனங்கள் நிறுத்துவதற்கு ஆட்கள் வராததாலும் காப்பக பராமரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக காய்கறி, மளிகை, மருந்து கடைகளுக்கு செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக 3 வண்ணங்களில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் வரும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகன காப்பகங்கள்
தஞ்சையில் இருந்து வெளி மாவட்டங்களிலும், வெளியூர்களிலும் ஏராளமானோர் தனியார் மற்றும் அரசு நிறுவனங் களில் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர கட்டிட தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள் தஞ்சையில் இருந்து பஸ், வாகனங்களில் வெளியூர் சென்று பணியாற்றி வருகிறார்கள். இது தவிர ரெயில்களிலும் திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கும் பணிகளுக்கு சென்று வருவார்கள்.
இவ்வாறு செல்பவர்கள் வீடுகளில் இருந்து ரெயில் நிலையமோ, அல்லது பஸ் நிலையத்திற்கோ தங்களது இருசக்கர வாகனங்களில் வருவார்கள். அவர்கள் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்றவற்றில் வருவது உண்டு. அவ்வாறு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகன காப்பகங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
வாடகை கட்டணம்
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன காப்பகங்கள் தஞ்சையில் மட்டும் 6 இடங்களில் உள்ளது. இது தவிர தனியார் மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான வாகன காப்பகங்கள் என 10-க்கும் மேற்பட்ட வாகன காப்பகங்கள் உள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வாகன காப்பகங்கள் உள்ளன.
இந்த வாகன காப்பகங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது எடுத்து செல்வார்கள். வெளியூர் செல்பவர்கள் 2 அல்லது 3 நாட்களோ, அல்லது வாரத்திற்கு ஒருமுறையோ வரும்போது வாகனங்களை எடுத்து செல்வார்கள்.
37 நாட்களாக நிற்கிறது
தஞ்சை மாநகரில் மட்டும் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், வாகன காப்பகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்றே ஏராளமானோர் தங்கள் வாகனங்களை எடுத்து சென்று விட்டனர்.
இன்னும் சிலர் வாகனங்களை எடுத்து செல்லாததால் அவைகள் வாகன காப்பகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாகன காப்பகங்களிலும் தற்போது 30 முதல் 50 வாகனங்கள் வரை எடுத்துச்செல்லப்படாமல் உள்ளன. அந்த வாகனங்கள் கடந்த 37 நாட்களாக எடுத்து செல்லாததால் தூசி அடைந்து காணப்படுகிறது. இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எப்போது எடுக்க வருவார்கள்? என்று வாகன காப்பகங்களை பராமரிப்பவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
சகஜ நிலைக்கு வருவோம்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன காப்பகத்தை பராமரித்து வரும் கார்த்திக்ராவ் கூறுகையில், “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனே பெரும்பாலானோர் வாகனங்களை எடுத்துச்சென்று விட்டனர். இன்னும் சில வாகனங்கள் உள்ளன. அவற்றை எப்போது எடுக்க வருவார்கள்? என்று தெரியவில்லை.
இருப்பினும் தினமும் ஒருவரை வாகன காப்பகங்களில் வேலைக்கு அமர்த்தி உள்ளோம். ஊரடங்கால் நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுக்கவும் ஆள்வரவில்லை. புதிதாக வாகனங்கள் வருவதற்கும் வழியில்லை. பஸ், ரெயில்கள் இயக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினால் தான் நாங்கள் சகஜ நிலைக்கு வருவோம்” என்றார்.
Related Tags :
Next Story