பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 May 2020 4:18 AM IST (Updated: 1 May 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், கொரோனா வைரஸ் காரணமாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் அவருடைய 28 வயது மனைவிக்கும் கொரோனா வைரஸ் உறுதியானதால் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் தாயார், அவருடைய மைத்துனர், உறவினரின் 7 மற்றும் 9 வயதான 2 சிறுவர்கள் என மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பல்லாவரம் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.

அந்த பகுதியில் வேறு யாருக்காவது கொரோனா உள்ளதா? என்பதை அறிய கொரோனா தொற்று கண்டறியும் வாகனம் அந்த பகுதியில் கொண்டுவரப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பெருங்களத்தூர் கண்ணன் அவென்யூ பகுதியிலும் இதுபோல் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ஆயுதப்படை போலீஸ்காரர்

சென்னையை அடுத்த பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் 15 ஆயுதப்படை போலீசாருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பல்லாவரம் தாலுகாவை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது.

கோயம்பேடு பூ வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் திருவேற்காட்டை சேர்ந்த ஒருவர் பூ கடை நடத்தி வருகிறார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Next Story