கொரோனா பாதிப்பு: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடன் கண்காணிப்பு அலுவலர் சண்முகம் வழங்கினார்
கொரோனா பாதிப்பு காரணமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவியை தஞ்சை மண்டல கண்காணிப்பு அலுவலர் சண்முகம் வழங்கினார்.
தஞ்சாவூர்,
கொரோனா பாதிப்பு காரணமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவியை தஞ்சை மண்டல கண்காணிப்பு அலுவலர் சண்முகம் வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் மூலம் சிறப்பு கடனுதவி திட்ட செயலாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 12,317 மகளிர் சுய உதவி குழுக்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 355 உறுப்பினர்கள் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகளின் மூலம் சிறப்பு கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது. சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.
இதற்கு வங்கிகளில் ஏற்கனவே 2 முறை கடன் பெற்று, வங்கியில் நிலுவை இல்லாமல் தொடர்ந்து கடன் செலுத்தும் சுய உதவி குழுக்களாக இருக்க வேண்டும். இதற்கான வட்டி விகிதம் 7.50 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஆகும்.
திரும்ப செலுத்த வேண்டும்
கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தில் பயன் பெறுபவர்கள் 24 முதல் 36 மாதங்களுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
முதல் 6 மாதங்கள் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. 6 மாதங்கள் கழித்து வட்டியுடன் கடனை செலுத்த வேண்டும்.
மேலும், மகளிர் சுய உதவி குழுவினர் ஏற்கனவே பெற்ற கடன் தொகை மற்றும் தற்போது பெறப்படும் கடன் தொகை இவற்றை சேர்த்து ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊரக வாழ்வாதார குழு விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக ஒரு வார காலத்திற்குள் பெற்று கடனுதவியை வழங்கிட அனைத்து வங்கிகளும் அறிவுறுத்தப்படுகிறது. தினம் எத்தனை சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது என்ற விவரத்தை அறிக்கையாக தினமும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
4 குழுக்களுக்கு காசோலை
தொடர்ந்து, இந்தியன் வங்கி மூலம் 4 சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியாக தலா ரூ.60 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, திட்ட இயக்குனர்(மகளிர் திட்டம்) ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், வங்கியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story