கோயம்பேட்டில் இருந்து வெளியேற வியாபாரிகள் மறுப்பு: மாதவரம் பஸ் நிலையத்தில் பழம், பூ அங்காடிகள் செயல்படவில்லை


கோயம்பேட்டில் இருந்து வெளியேற வியாபாரிகள் மறுப்பு: மாதவரம் பஸ் நிலையத்தில் பழம், பூ அங்காடிகள் செயல்படவில்லை
x
தினத்தந்தி 1 May 2020 4:20 AM IST (Updated: 1 May 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளியேற வியாபாரிகள் மறுத்துள்ள நிலையில், மாதவரம் பஸ் நிலையத்தில் பழம், பூ அங்காடிகள் நேற்று செயல்படவில்லை. இதனால் நள்ளிரவு முதல் காத்திருந்த சில்லரை வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை, 

சென்னையில் கொரோனா வைரஸ் வீரியம் தனது கோரத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டு தான் வருகிறது. குடியிருப்பு பகுதிகளை கடந்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. கடை உரிமையாளர் மற்றும் பணியாட்கள் என கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி, பழங்கள், பூக்கள் என வாங்குவதற்காக மக்கள் நேரடியாக வர தடை விதிக்கப்பட்டது. சில்லரை விற்பனைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

வியாபாரிகள் எதிர்ப்பு

குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழங்கள் அங்காடி மற்றும் பூ மார்க்கெட் 30-ந்தேதி (நேற்று) முதல் மாதவரம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அறிவித்தது. சி.எம்.டி.ஏ.வின் இந்த அறிவிப்புக்கு பூ மற்றும் பழ வியாபாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஊரடங்கு முடியும் வரை கடைகளை அடைப்போமே தவிர மாதவரம் பஸ் நிலையத்துக்கு கடைகளை மாற்றமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று பூ மார்க்கெட் மற்றும் பழ அங்காடிகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து பூ மற்றும் பழ வியாபாரிகள் ஆலோசனை கூட்டமும் நேற்று நடந்தது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து மாதவரம் பஸ் நிலையத்துக்கு கடைகளை மாற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், கடைகள் அடைப்பை தொடருவதாகவும் வியாபாரிகள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் மாதவரம் பஸ் நிலையத்தில் நேற்று எந்த ஒரு பூக்கடையோ அல்லது பழக்கடையோ அமைக்கப்படவே இல்லை. மாதவரம் பஸ் நிலையம் பூட்டப்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

மாதவரம் பஸ் நிலையத்தில்...

இதற்கிடையில் மாதவரம் பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட், பழ அங்காடிகள் மற்றும் காய்கறி சில்லரை விற்பனை நடைபெறும் என்ற சி.எம்.டி.ஏ.வின் அறிவிப்பை நம்பி ஏராளமான சில்லரை வியாபாரிகள் சரக்குகளை வாங்கி செல்வதற்காக வாகனங்களுடன் நேற்று நள்ளிரவு முதல் மாதவரத்தில் கூடினர். மாதவரம் பஸ் நிலையம் மூடப்பட்டிருப்பதையும், உள்ளே எந்த கடைகளும் இன்னும் செயல்படவில்லை என்ற தகவலும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஒருகட்டத்தில் வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். ஒருகட்டத்தில் போலீசார்-வியாபாரிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. பின்னர் ஒருவழியாக வியாபாரிகள் சமாதானமடைந்து பொருட்கள் கிடைக்காத ஏமாற்றத்தில் அங்கிருந்து முணுமுணுத்துக்கொண்டே புறப்பட்டனர். வியாபாரிகள் போலவே பொதுமக்கள் ஏராளமானோர் மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை பார்க்க முடிந்தது.

ஏமாற்றத்தில் சில்லரை வியாபாரிகள்

இதுகுறித்து சில்லரை வியாபாரிகள் கூறியதாவது:-

கோயம்பேட்டில் சில்லரை வியாபாரம் நடக்காது, மாதவரத்துக்கு செல்லுங்கள் என்று சி.எம்.டி.ஏ. சொல்கிறது. இங்கே வந்தால் இன்னும் வியாபாரிகள் வரவில்லை. நாளைக்கு வாருங்கள் என்று போலீசார் விரட்டுகிறார்கள். சரக்குகள் இல்லாமல் நாங்கள் எப்படி செல்வது? ஏரியா மக்கள் காய்கறி கேட்கும்போது நாங்கள் என்ன செய்வது? ஏன் இப்படி எங்களை அலைக்கழிக்கிறார்கள்?

ஏற்கனவே வியாபாரம் மந்தமாகி வரும் சூழ்நிலையில் எங்களுக்கு காய்கறி சுத்தமாக கிடைக்காமல் போனால் வியாபாரிகள் நிலைமை கவலைக்கிடமாக ஆகிவிடும். இதை ஏன் யாருமே புரிந்துகொள்வதில்லை? சரக்குகள் எடுப்பதற்காக நள்ளிரவு முதல் வாகனங்களில் காத்திருக்கிறோம். ஆனால் எங்களை அனைவரும் அலைக்கழித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story