கொடுங்கையூரில் கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட தந்தை-மகனுக்கு வெட்டு - வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்
கொடுங்கையூரில் கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட தந்தை-மகனை கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள், சாலையோரம் நிறுத்தி இருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அண்ணா சாலை பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து கஞ்சா வாங்குவதற்காக அங்கு வரும் வாலிபர்கள், கஞ்சாவை அந்த பகுதிலேயே கும்பலாக அமர்ந்து புகைப்பது வழக்கமாகி உள்ளது. இவ்வாறு அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா புகைத்தவர்களை அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 43) மற்றும் அவருடைய மகன் லோகேஷ் (21) இருவரும் தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ரவி மற்றும் அவருடைய மகன் லோகேஷ் இருவரையும் சரமாரியாக கற்களால் தாக்கினர். மேலும் ஆத்திரம் அடங்காமல் கத்தியால் இருவரையும் வெட்டினர்.
வாகனங்களை அடித்து நொறுக்கினர்
அத்துடன் அங்கிருந்து தப்பிச்செல்லும்போது சாலையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்பட 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச்சென்று விட்டது. இந்த சம்பவத்தை கண்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், படுகாயம் அடைந்த ரவி, லோகேஷ் இருவரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய மர்ம நபர்களையும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story