முதுமலை ஊராட்சியில் காட்டுயானைகள் அட்டகாசம் 130 வாழைகள் சேதம்


முதுமலை ஊராட்சியில் காட்டுயானைகள் அட்டகாசம் 130 வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 30 April 2020 11:17 PM GMT (Updated: 30 April 2020 11:17 PM GMT)

முதுமலை ஊராட்சியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அதில் 130 வாழைகள் சேதம் அடைந்தன.

கூடலூர்,

கூடலூர், முதுமலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வறட்சியின் தாக்கம் குறையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கி உள்ளது.

கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள புத்தூர்வயல், தொரப்பள்ளி, கோத்தர்வயல், ஏழுமுறம் மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் காட்டுயானைகள் விவசாய பயிர்களை தேடி நள்ளிரவு ஊருக்குள் வருகிறது. வாழை, பாக்கு, தென்னை பயிர்களை தின்று சேதப்படுத்துகிறது. சில காட்டு யானைகள் பொதுமக்கள் வீடுகளில் வைத்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்பதற்காக வீடுகளை உடைக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

காட்டுயானைகள் அட்டகாசம்

இதன் காரணமாக அவர்கள் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வனத்துறையினரிடம் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூடலூர்- முதுமலை கரையோரம் மண் மூடி கிடக்கும் அகழிகளை பொக்லைன் எந்திரம் கொண்டு வனத்துறையினர் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதுமலை ஊராட்சி நெல்லிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுயானைகள் கூட்டமாக ஊருக்குள் வந்தன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள உன்னிகிருஷ்ணன் என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. நள்ளிரவு முதல் விடியற்காலை வரை தோட்டத்துக்குள் நின்று வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

இழப்பீடு

இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டுயானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் பல கட்டங்களாக போராடி காட்டுயானைகளை விடியற்காலையில் விவசாயிகள் விரட்டியடித்தனர். இதில் சுமார் 130 வாழைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து முதுமலை வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயி உன்னிகிருஷ்ணன் வனத்துறையிடம் இழப்பீடு தொகை வழங்கும்படி மனு அளித்தார். மேலும் இன்னும் 2 வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழைத்தார்களை காட்டு யானைகள் மிதித்து நாசம் செய்து விட்டன. எனவே ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

Next Story