திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி பசுமாடு சாவு
திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. முத்துப்பேட்டையில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.
திருவாரூர்,
திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. முத்துப்பேட்டையில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.
பலத்த மழை
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூரில் நேற்று காலை 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.
பசுமாடு சாவு
நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முத்துப்பேட்டை, ஆலங்காடு, உப்பூர், தில்லைவிளாகம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது29) என்பவருடைய பசுமாடு ஆலங்காடு கோட்டகம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி தினேஷ்குமார் முன்னிலையில் கால்நடை மருத்துவர் மகேஸ்வரன் மாட்டை பரிசோதனை செய்தார். பின்னர் அந்த பசுமாடு அங்கேயே புதைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
நாகை-வேதாரண்யம்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதேபோல நாகூர், வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், கருவேலங்கடை, செருதூர், பிரதாபராமபுரம், திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.
மழை காரணமாக நாகையில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. வேதாரண்யம், தோப்புத்துறை, தேத்தாகுடி, கள்ளிமேடு, செம்போடை, ஆறுகாட்டுத்துறை, தென்னம்புலம் ஆகிய பகுதிகளில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.
Related Tags :
Next Story