மதுரையில் பேரிடர் மீட்பு படை வீரர் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 84-ஆக உயர்வு


மதுரையில் பேரிடர் மீட்பு படை வீரர் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 84-ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 May 2020 5:30 AM IST (Updated: 1 May 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பேரிடர் மீட்பு படை வீரர் உள்பட மேலும் 5 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்தது.

மதுரை, 

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 79 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் 2 தினங்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்த நிலையில் நேற்று மதுரையில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 3 பெண்கள், 2 ஆண்கள்.

முதலாவதாக மதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 29 வயது பிரசவமான பெண். மற்றொருவர் கீழ அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண். அடுத்ததாக கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது ஆண். இந்த 3 பேருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இவர்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 42 வயது பெண் சுகாதார பணியாளர். இவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா வார்டில் பணிபுரியும் இவருக்கு, அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளியிடம் இருந்து நோய்த்தொற்று பரவியதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மதுரையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் மற்றொருவர் 26 வயதுடைய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர் ஆவார். சென்னையைச் சேர்ந்த போலீஸ் பட்டாலியனில் இருந்து மீட்புப் பணிக்காக ஒரு குழுவினர் மதுரை வந்தனர். அவர்கள் மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் தங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தற்போது பேரிடர் மீட்பு படை வீரர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அவருடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது.

Next Story