பல பெண்களை ஏமாற்றிய வாலிபர்: குண்டர் சட்டம் பாய்ந்த காசி மீது புகார்கள் குவிகிறது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக மேலும் ஒரு வழக்கு


பல பெண்களை ஏமாற்றிய வாலிபர்: குண்டர் சட்டம் பாய்ந்த காசி மீது புகார்கள் குவிகிறது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 1 May 2020 12:11 AM GMT (Updated: 2020-05-01T05:41:22+05:30)

பல பெண்களை ஏமாற்றியதால் குண்டர் சட்டம் பாய்ந்த காசி மீது புகார்கள் குவிகிறது. கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 

பல பெண்களை ஏமாற்றியதால் குண்டர் சட்டம் பாய்ந்த காசி மீது புகார்கள் குவிகிறது. கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல பெண்களை ஏமாற்றினார்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதோடு, அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்தார்.

மேலும், அவருடைய ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார். காசியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பெண் டாக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் காசி மீது அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், பெண் டாக்டரிடம் நெருங்கி பழகி ஏமாற்றியது போல் பல பெண்களையும் மிரட்டி பணம் பறித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இதற்கிடையே நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயர் ஒருவர் காசி மீது ஒரு புகார் அளித்தார். அதாவது, தன்னிடம் நெருங்கி பழகிய காசி, என்னிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டினார். அதன் பேரில் காசி மீது நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் காசி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது நேற்றுமுன்தினம் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து நாங்குநேரி சிறையில் இருந்த காசியை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த பரபரப்புக்கு இடையே காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் அலெக் சாண்ட்ரா பிரஸ் ரோட்டை சேர்ந்தவர் டிராவிட் (28). இவர் காசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதற்காக டிராவிட்டின் மோட்டார் சைக்கிளை காசி வாங்கி கொண்டார். கடனை திருப்பி கொடுத்தவுடன் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறியிருக்கிறார். பின்னர் டிராவிட் தான் வாங்கிய ரூ.2 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து காசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் காசி பணத்தை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்காமல் கூடுதலாக வட்டி கேட்டு டிராவிட்டை மிரட்டியதாக தெரிகிறது.

இந்த சமயத்தில், காசியின் லீலைகளும் தொடர்ந்து வெளியே வந்த வண்ணம் இருந்தன. இதன் பிறகு தான் டிராவிட் காசி மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

பரபரப்பு

அதன்படி டிராவிட் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் காசி மீது கந்து வட்டி கேட்டு மிரட்டல், மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே பெண்களை மிரட்டி பணம் பறித்த காசி தற்போது கந்துவட்டி புகாரிலும் சிக்கியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story