பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை உறை கிணற்றில் வீசி கொலை கல் நெஞ்சம் கொண்ட தாய்க்கு போலீஸ் வலைவீச்சு


பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை உறை கிணற்றில் வீசி கொலை கல் நெஞ்சம் கொண்ட தாய்க்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 May 2020 12:15 AM GMT (Updated: 2020-05-01T05:45:29+05:30)

ஆண்டிப்பட்டி அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை உறை கிணற்றில் வீசி கொலை செய்த கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தில் வைகை ஆற்றில் பயன்பாடின்றி கிடக்கும் உறை கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் பிணம் மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், க.விலக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உறைக்கிணற்றில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டனர். பிறந்து 2 நாட்களே ஆன அந்த ஆண் குழந்தையின் தொப்புள் கொடியில், பிரசவத்தின் போது பொருத்தப்பட்ட கிளிப் கூட அப்படியே அகற்றப்படாமல் இருந்தது காண்போரை கண்கலங்க வைத்தது.

கிணற்றில் வீசி கொலை

மேலும் குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. தகாத உறவில் பிறந்ததால் உறை கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உறைகிணற்றில் வீசி குழந்தையை கொன்ற கல் நெஞ்சம் கொண்ட தாயை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story