தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர் தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார்
தக்கலை பகுதியில் தாய் இறந்த சோகத்திற்கு இடையேயும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர் ஈடுபட்டு வருகிறார். தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார்.
பத்மநாபபுரம்,
தக்கலை பகுதியில் தாய் இறந்த சோகத்திற்கு இடையேயும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர் ஈடுபட்டு வருகிறார். தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார்.
ஏ.டி.எம். மையம் மூலம் கொரோனாவா?
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். அதே சமயத்தில், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தனித்திரு, விழித்திரு, முக கவசம் அணிவோம், கைகழுவும் திரவம் மூலம் கைகளை நன்றாக கழுவ வேண்டும் போன்ற விதிமுறையை கடைப்பிடித்து கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம் என அரசும், தன்னார்வலர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஏ.டி.எம். மையத்துக்கு சென்று கார்டை சொருகி தொடுதிரை மூலமாக பணம் எடுக்கும் போது, தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் அந்த அச்சத்தின் இடையே பணம் எடுத்து தான் வருகிறார்கள். இதனை கவனித்த தக்கலை முளகுமூடு பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி. முகவரான பிரான்சிஸ் (வயது 47) என்பவரும், கொரோனா பரவலுக்கு இதுவும் காரணமாகி விடுமோ என்று அஞ்சினார்.
தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்
மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனா பரவலை தடுக்க நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப ஏ.டி.எம். மையத்தின் வாசல் முன்பு கைகழுவும் திரவம், தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யலாம் என நினைத்தார். அதன்படி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறார். தினமும் ஒவ்வொரு ஏ.டி.எம். மையத்திற்கும் சென்று அதன் வாசல் முன்பு வாளியில் தண்ணீர் மற்றும் கைகழுவும் திரவம் வைப்பதையும், அன்றாட பணிகளில் ஒன்றாக செய்தார். சில ஏ.டி.எம். மையம் முன்பாக கைகழுவும் திரவத்தை தண்ணீரில் கலந்தும் வைத்துள்ளார்.மேலும், 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் இந்த பணியை விரிவுபடுத்தினார்.
தாய் இறந்த சோகம்
இதற்கிடையே அவருடைய தாய் இறந்து விட்டார். எனினும், கொரோனா பரவலை தடுக்கும் பணியை விடவில்லை. தாய் இறந்த சோகத்தின் இடையேயும், தன்னால் முடிந்த அளவுக்கு யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் கண்ணும், கருத்துமாக இருந்து தன்னுடைய பணியையும் தொடர்ந்தார். இந்த அர்ப்பணிப்பை பார்த்த பொதுமக்கள் பிரான்சிஸின் சேவையை வெகுவாக பாராட்டினர். மேலும் இதுகுறித்து பிரான்சிஸ் கூறுகையில், ஏ.டி.எம். மூலமாக பணம் எடுக்கும் போது கைகள் தொடுதிரையில் படும் போது, அதன் மூலமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்று நினைத்தேன். நான் நினைத்த மாதிரியே, ஒரு மாநிலத்தில் ஏ.டி.எம். மையம் மூலம் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அன்றாட பணி
இதனையடுத்து ஏ.டி.எம். மையத்திற்கு வருபவர்கள், கை கழுவும் திரவத்தை பயன்படுத்தி கைகழுவ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி தினமும் வாகனம் மூலம் சென்று அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். இவையெல்லாம் என்னுடைய சொந்த செலவில் செய்கிறேன். அந்த வகையில் தக்கலை, திங்கள்நகர், சாமியார்மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் தினமும் அன்றாட பணியாக மேற்கொள்கிறேன். தாய் இறந்த சோகம் என்னை வாட்டினாலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது எனக்கு திருப்தி தருகிறது. இதேபோல் அனைத்து மக்களும் தன்னுடைய பங்களிப்பை செயல்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார்.
Related Tags :
Next Story