பாளையங்கோட்டையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
பாளையங்கோட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் போராட்டம்
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீரேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சில தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
பழுது பார்க்கும் பணிகள் முடிந்ததும் வழக்கம் போல் குடிதண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனாலும் பல பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஆரோக்கியநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள திருச்செந்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
லாரி மூலம் குடிதண்ணீர்
அதேபோல் பாளையங்கோட்டை மார்க்கெட், செந்தில் நகர், பெரியார் நகர், சமாதானபுரத்தை சேர்ந்த பொதுமக்களும் சீரான தண்ணீர் வழங்கக்கோரி சமாதானபுரம் நீரேற்று நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் லாரி மூலம் குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story